சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானை கூட்டம்: வனத்துறை எச்சரிக்கை

சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானை கூட்டம்: வனத்துறை எச்சரிக்கை
சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானை கூட்டம்: வனத்துறை எச்சரிக்கை

ஓசூர் அருகே 60 காட்டு யானைகள் தஞ்சமடைந்துள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் தற்போது சுமார் 60-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தஞ்சமடைந்து முகாமிட்டுள்ளன. இதனால் அந்த பகுதியைச் சுற்றியுள்ள கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி வனத் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக நூற்றுக்கணக்கான யானைகள் கர்நாடக மாநிலம் பன்னருகட்டா வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட வனப்பகுதிகள் வழியாக ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதிக்குள் முகாமிட்டிருந்தன. இந்த யானை கூட்டம் பல்வேறு குழுக்களாக பிரிந்து அவ்வப்போது அருகில் கிராமப் பகுதிகளில் உள்ள விளை நிலங்களுக்குள் சென்று பயிர்களை சேதப்படுத்தி வருவதுடன் பொதுமக்களையும் அச்சுறுத்தி வருகின்றன.

இதையடுத்து வனத்துறையினர் யானைகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருவதுடன் அவைகள் வனப்பகுதியில் இருந்து கிராமப் பகுதிக்குள் புகுந்து விடாதவாறு பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இருந்த போதிலும் சில நேரங்களில் கூட்டங்களிலிருந்து பிரிந்து செல்லும் ஒற்றை யானை அருகில் உள்ள கிராமப் பகுதிக்குள் புகுந்து விடுவதுடன் விவசாயிகளையும் தாக்கி உயிரிழப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

இதைத் தொடர்ந்து நேற்று சுமார் 20-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக நாகமங்கலம் பகுதியில் முகாமிட்டிருந்தன. இந்த நிலையில் இன்று அதிகாலை அந்த 20 யானைகளும் சானமாவு வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிக்கு வந்து தஞ்சம் அடைந்தன. இவற்றுடன் மேலும் சுமார் 40-க்கும் மேற்பட்ட யானைகள் உணவு தேடி சானமாவு பகுதிக்குள் வந்து தஞ்சம் அடைந்துள்ளன.

இந்த யானை கூட்டங்கள் பகல் நேரங்களில் வனப் பகுதிக்குள்ளேயே இருந்து விடுகிறது. இரவு நேரங்களில் உணவு தேடி வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து விடுகின்றன. எனவே யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து அவைகளை வனப் பகுதிக்குள் தொடர்ந்து விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தற்பொழுது சானமாவு வனப் பகுதியில் சுமார் 60-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளதால் எந்த நேரமும் அவைகள் கிராமப் பகுதிக்குள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. எனவே வனப்பகுதியை சுற்றியுள்ள சானமாவு, பீர்ஜேப்பள்ளி, ஆழியாளம், போடுர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதுகாப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்றும், இரவு நேரங்களில் வனப்பகுதி ஒட்டி வர வேண்டாம் என்றும், வனப்பகுதிக்குள் கால்நடை மேச்சலுக்கும் விறகு சேகரிக்கவும் செல்ல வேண்டும் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com