நீதிமன்றத்தில் வளர்க்கப்படும் மூலிகை செடிகள்

நீதிமன்றத்தில் வளர்க்கப்படும் மூலிகை செடிகள்

நீதிமன்றத்தில் வளர்க்கப்படும் மூலிகை செடிகள்
Published on

வழக்குகளை சந்திக்க வரும் கைதிகளின் மன அழுத்தத்தை குறைக்கவும், நேர்மறையான எண்ணங்களை மேம்படுத்தவும் கோவை நீதிமன்ற வளாகத்தில் மூலிகை செடிகள் வளர்க்கும் புதிய முயற்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்ற வளாகத்தில் பசுமை வளாகம் என்ற திட்டத்தின் மூலம் நீதிமன்றத்தை சுற்றி 15க்கும் மேற்பட்ட செடிகள் தொட்டியில் வைக்கப்பட்டுள்ளன. செவ்வந்தி, துளசி, கற்பூரவள்ளி, கற்றாழை, மல்லி, தூதுவளை ஆகிய செடிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. நீதிமன்ற ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு செடி ஒதுக்கப்பட்டு, தினந்தோறும் தண்ணீர் ஊற்றி பராமரிக்கும் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஊழியர்கள் பணியை திறம்ப செய்யவும், அவர்களை உற்சாகப்படுத்தவும் செடிகளின் பெயருக்கு முன் அதை பராமரிக்கும் ஊழியர்களின் பெயரை சேர்த்து பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

செடியின் தன்மை, அதன் சிறப்பு குறித்தும் ஒவ்வொரு செடியில் வைக்கப்பட்டுள்ள பலகையில் விரிவாக எழுதி வைக்கப்பட்டுள்ளது. சுற்றுப்புறச்சூழலை மேம்படுத்தவும், முக்கியமான ஆவணங்களை கையாளும் நீதிமன்ற பணியாளர்களுக்கும், நீதிமன்றத்திற்கு வரும் அழைத்து வரப்படும் கைதிகளின் மன அழுத்தத்தையும், அவர்களின் எண்ணங்களை தூய்மையாக்கும் வகையிலும், சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக்கொள்ள இந்த  மூலிகை செடிகள் வளர்க்கப்படுவதாக கூறுகின்றனர் நீதிமன்ற ஊழியர்கள்.

கோவை 5வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி இனியா கருணாகரன் முயற்சியால் மேற்கொள்ளப்படும் இந்த திட்டத்திற்கு தேவையான செடிகளை வனத்துறை வழங்குகிறது. தொடர்ந்து, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள பிற நீதிமன்றங்களும் இதுபோன்று செடிகள் வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com