சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கில் கணவர் ஹேம்நாத் விடுதலை!
சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கில் கடந்த 2020 ஆம் ஆண்டு அவரது கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் வழக்கை விசாரித்த திருவள்ளூர் மகளிர் நீதிமன்றம் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி, ஹேம்நாத்தை தற்போது விடுதலை செய்துள்ளது.
சின்னத்திரையில் தனது திறமையான நடிப்பின் மூலம் மக்களின் மனங்களை வென்றவர்தான் நடிகை சித்ரா. இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டையில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் தற்கொலை செய்து கொண்டார்.
(தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.)
இதனையடுத்து சித்ராவின் மரணத்தில் இவருக்கு தொடர்பு இருப்பதாக கூறி அவரின் கணவர் ஹேம்நாத் மீது நசரத்பேட்டை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். பின்னர், இந்த வழக்கு விசாரணையானது திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
பின்னர் சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் “வயது முதிர்வால் அடிக்கடி திருவள்ளூர் மாவட்டத்திற்கு செல்ல முடியவில்லை. ஆகவே சென்னையில் உள்ள கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மாற்றவும்” எனக்கோரி மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.
இதனை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த வெங்கடேஷ், இவ்வழக்கை மாற்ற மறுப்பு தெரிவித்து, வழக்கை ஆறு மாதங்களில் முடிக்க வேண்டும் என்று திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்திற்கு உத்தரவு பிறப்பித்தார்.
இதற்கிடையில், சித்ராவின் கணவர், பிணை வேண்டி மனுத்தாக்கல் செய்திருந்தார். அதனை விசாரித்த நீதிமன்றம், கைது செய்யப்பட்டு 60 நாள்கள் கடந்தும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாததால் ஹேம்நாத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியிருந்தது.
இந்நிலையில், இவ்வழக்கை விசாரித்த திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி ரேவதி “சித்ராவின் மரண வழக்கில் கணவர் ஹேம்நாத்திற்கு தொடர்பு உள்ளது என்று, போதுமான ஆதாரங்கள் எதுவும் சமர்பிக்கப்படவில்லை” என்று கூறி, ஹேம்நாத்தை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளார்.