‘தொந்தரவு இருந்தா துணிந்து சொல்லுங்க’- மாணவர்களுக்காக தருமபுரி பள்ளி எடுத்த புதிய முயற்சி

‘தொந்தரவு இருந்தா துணிந்து சொல்லுங்க’- மாணவர்களுக்காக தருமபுரி பள்ளி எடுத்த புதிய முயற்சி
‘தொந்தரவு இருந்தா துணிந்து சொல்லுங்க’- மாணவர்களுக்காக தருமபுரி பள்ளி எடுத்த புதிய முயற்சி

பள்ளி மாணவர்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களை தடுக்க, புகார் தெரிவிக்க வசதியாக பள்ளி புத்தகங்களில் உதவி எண்கள் பதிவு செய்து தருமபுரி பள்ளி ஆசிரியர்கள் விழிப்புணர்வு முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழக அரசு சார்பில் பள்ளி கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு யாரேனும் கொடுத்தால் அது குறித்து புகார் செய்ய, புகார் எண்கள் அறிவித்து அதுசார்பில் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தருமபுரி அரசு அவ்வையார் மேல்நிலைப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை சுமார் 3,500 மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு எதிராக நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுப்பது குறித்து ஆசிரியர்கள் பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ள உதவி எண்களை தமிழகத்திலேயே முதல் முறையாக, முன் மாதிரியாக தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் ரப்பர் ஸ்டாம்பில் தயார் செய்துள்ளனர். இதனை இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவிகளின் அனைத்து பாட புத்தகங்களின் முன் பக்கங்களில் பதித்து வருகின்றனர். இதில் கல்வி வழிகாட்டி மையம் எண் 14417, குழந்தைகளின் உதவி எண் 1098, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 1077 மாவட்ட ஆட்சியரின் வாட்ஸ்அப் எண் போன்றவற்றை குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இந்த உதவி மையத்தில் உள்ள புகார் எண்களுக்கு தொடர்பு கொண்டால், புகார் தெரிவிப்பவர்கள் குறித்த முழு விவரம் ரகசியமாக வைக்கப்படும். எனவே குழந்தைகள் பள்ளி, கல்லூரி மாணவிகள் தங்களுக்கு தொந்தரவுகள் ஏற்பட்டால் உடனடியாக தெரிவிக்கலாம். அதேபோல் இந்தப் உதவி மையம் மற்றும் புகார் எண்கள் குறித்து தங்களது கிராமத்திலுள்ள பெண்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் ஆசிரியர்கள் மாணவிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர். மேலும்  தமிழகத்திலேயே முதன் முறையாக தருமபுரி அரசுப் பள்ளி ஆசிரியர்களின் புதிய முயற்சி, மாணவிகளுக்கு  மிகுந்த பயன் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com