மகளின் உடலை அடக்கம் செய்ய உதவி: காவல் ஆய்வாளரின் காலில் விழுந்து நன்றி தெரிவித்த தந்தை

மகளின் உடலை அடக்கம் செய்ய உதவி: காவல் ஆய்வாளரின் காலில் விழுந்து நன்றி தெரிவித்த தந்தை
மகளின் உடலை அடக்கம் செய்ய உதவி: காவல் ஆய்வாளரின் காலில் விழுந்து நன்றி தெரிவித்த தந்தை

வாணியம்பாடியில் இளம்பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பணம் இல்லாததால் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. திருமணமாகி 2 வருடங்களே ஆனதால் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடைபெறுகிறது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெரியபேட்டை பகுதியில் வசித்து வருபவர் செல்வம். இவரது மகள் சுலோச்சனா. இருளர் இனத்தை சேர்ந்தவர். சுலோச்சனாவுக்கும் ஆறுமுகம் என்பவருக்கும் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இருவரும் வீட்டில் இருந்தபோது திடீரென சுலோச்சனாவுக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. அவரை மருத்துவமனைக்கு ஆட்டோவில் அழைத்துச் செல்ல பணம் இல்லாததால் ஆறுமுகம் தனது மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து செல்லவில்லை எனக் கூறப்படுகிறது.

பின்னர் நேற்று காலை சுலோச்சனாவை வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சேர்த்தபோது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சுலோச்சனா உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தப்படும் என காவல்துறையினர் தெரிவித்த நிலையில் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி விசாரணை நடத்தினார்.

இதனையடுத்து சுலோச்சனா உடலை அடக்கம் செய்யக்கூட பணம் இல்லாமல் அவரது உறவினர்கள் மற்றும் கணவர் மருத்துவமனையில் வெகுநேரமாக நின்றிருந்தனர். இதை கவனித்த வாணியம்பாடி நகர ஆய்வாளர் கோவிந்தசாமி மற்றும் காவலர்கள் மருத்துவமனையில் இருந்த சுலோச்சனாவின் தந்தை செல்வம் மற்றும் அவரது கணவர் ஆறுமுகம் ஆகியோரை அழைத்து பேசி இறுதி சடங்கு செய்ய பண உதவி செய்தனர்.

அப்போது சுலோச்சனாவின் தந்தை செல்வம், ஆய்வாளரின் காலில் விழுந்து நன்றி தெரிவித்த சம்பவம் பார்ப்போர் நெஞ்சை பதற வைத்தது. பின்னர் மருத்துவமனையில் உள்ள அமரர் ஊர்தி மூலம் சுலோச்சனாவின் பிரேதம் கொண்டு செல்லப்பட்டு பெரியபேட்டை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இச்சம்பவம் வாணியம்பாடியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com