சென்னை சாலையில் எமதர்ம ராஜா... உயிரை பறிக்க அல்ல.. உயிரை காக்க..!
சென்னையில் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் பொருட்டு போக்குவரத்து போலீசார் புதிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். மேலும் போக்குவரத்து போலீசாரின் இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவே கூறப்படுகிறது.
போக்குவரத்து போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஆங்காங்கே நடக்கும் ஒருசில மோதல் சம்பவங்கள் போலீசார் மீது மக்களுக்கு வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்தும் நிகழ்வாக சில நேரங்களில் அமைந்து விடுகிறது. சென்னை போரூர் பிரதான சாலையில் கடந்த மாதம் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் 3 பேரை, போரூர் காவல்நிலைய தலைமை காவலர் பாபு கடுமையாக தாக்கியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான செய்திகளும் சமூக வலைத்தளங்களில் பரவின. இதனால் அந்த காவலர் மீது கடுமையான விமர்சனங்களும் எழுந்தன. இதனையடுத்து காவல் ஆணையர் உத்தரவின்பேரில் ராமாபுரத்தில் உள்ள சம்பந்தபட்ட இளைஞர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று மாவட்ட துணை ஆணையர் சர்வேஷ்ராஜ் மற்றும் உதவி ஆணையர் கண்ணன், காவலர் பாபு உள்ளிட்டோர் வருத்தம் தெரிவித்தனர். அத்தோடு மட்டுமில்லாமல் இளைஞர்களுக்கு அப்துல்கலாமின் அக்னி சிறகுகள் என்ற புத்தகமும், இனிப்புகளும் அளித்து அறிவுரை வழங்கினர். காவல்துறையினரின் இந்த நடவடிக்கை அப்பகுதி மக்களிடம் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் பொருட்டு போக்குவரத்து போலீசார் சென்னையில் புதிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். வெயில் வெளியே பட்டையைக் கிளப்புவதால் ஒருசிலர் ஹெல்மெட் அணிய தயக்கம் காட்டுகின்றனர். ஒருசிலரோ போக்குவரத்து போலீசாரை கண்டதும் மட்டுமே ஹெல்மெட் அணிகிறார்கள். ஒருசிலரோ தங்கள் வண்டிகளில் ஹெல்மெட் வைத்திருந்தாலும் அதனை அணிவது என்பது இல்லை. ஆனால் சில இடங்களில், ‘ஹெல்மெட் மட்டும் அணிந்திருந்தால் இவர் நிச்சயம் உயிர் பிழைத்திருப்பார்’ என ஆங்காங்கே சிலர் சொல்வதையும் கேட்டிருப்போம். எத்தனையோ அறிவுரைகள் வழங்கினாலும் சிலர் அதனை முறையாக பின்பற்றாத நிலையில் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவத்தை மக்கள் மனதில் பதியவைக்கும் பொருட்டு போக்குவரத்து போலீசார் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.
ஐபிஎஸ் அதிகாரி சுதாகர், மக்களுக்கும் போலீசாருக்கும் நல்ல புரிதலை ஏற்படுத்தும் பொருட்டு போக்குவரத்து போலீசாருக்கு இந்த அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதன்படி எமதர்ம ராஜா உருவத்தில் போக்குவரத்து போலீசாருடன் சாலையில் நிற்கும் ஒருவர், அங்கு ஹெல்மெட் அணியாமல் வரும் நபர்களுக்கு அறிவுரைகளை வழங்குகிறார். நாங்கள் எமதர்மர்களாக இங்கே நிற்பது உங்கள் உயிரை பறிக்க அல்ல.. உங்களது உயிரை காக்க என தெரிவிக்கின்றனர் அந்த நபர்கள். அவர்கள் அருகில் நிற்கும் போலீசார் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் பதாதைகளை கையில் வைத்துள்ளனர். அங்கே ஹெல்மெட் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளும் போலீசாரின் அறிவுரைக்கு பின் இனிமேல் நிச்சயம் ஹெல்மெட் அணிவதாக தெரிவிக்கின்றனர். திருவல்லிக்கேணி, அண்ணாசாலை, கீழ்ப்பாக்கம். போரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போக்குவரத்து போலீசார் இந்த முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றனர்.
இதுகுறித்து போக்குவரத்து காவல் ஆய்வாளர் வடிவேலு நம்மிடம் கூறும்போது, “ கிட்டத்தட்ட 85 சதவீத வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிகின்றனர். 15 சதவீத மக்கள்தான் ஹெல்மெட் அணிவதில்லை. அவர்களுக்கு இதுபோன்ற விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் ஹெல்மெட்டின் முக்கியத்துவம் அவர்கள் மனதில் பதியும். அனைவரும் ஹெல்மெட் அணிகிறார்கள் என்ற நிலைக்கு வந்துவிடுவோம். பொதுமக்களும் இந்த முயற்சிக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுக்கின்றனர். மக்கள் மத்தியில் இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு உள்ளது” என தெரிவித்தார்.