
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜையை அக்டோபர் 30 ஆம் தேதி அரசு விழாவாக கொண்டி வருகிறது தமிழக அரசு. அதன்படி, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று (திங்கள்) நடைபெற உள்ள 116 வது தேவர் ஜெயந்தி மற்றும் 61வது தேவர் குருபூஜைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் வருகை தருவார்கள் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திற்கு வரும் பொதுமக்கள் உள்ளே வருவதற்கும் வெளியே செல்வதற்கும் தனித்தனி பாதைகள் அமைக்கப்பட்டு காவல் துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாதுகாப்பு காரணத்திற்காக இரண்டு நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பசும்பொன் கிராமத்திற்குள் அனுமதி பெற்ற நான்கு சக்கர வாகனங்களில் மட்டுமே செல்ல முடியும். இருசக்கர வாகனங்களில் தேவர் குருபூஜைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ராமநாதபுரம் மட்டுமின்றி மதுரை, புதுக்கோட்டை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ராமநாதபுரம் எல்லைப் பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். உரிய காரணமின்ற வெளி மாவட்ட வாகனங்கள் ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.