
நாமக்கல் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக கொல்லிமலையில் உள்ள ஆகாயகங்கை நீர்வீழ்ச்சிக்கு நீர்வரத்து அதிகரித்தது. அருவி நீரோடு கற்கள், பாறைகள் வர வாய்ப்பு இருப்பதால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் ஒருமணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது. எலவனாசூர்கோட்டை, எறையூர், மடப்பட்டு, சேந்தநாடு, குன்னத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் குளம் போல் தேங்கியதால் நோயாளிகள் கடும் அவதியடைந்தனர். அதிகபட்சமாக பொறையாரில் 38 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டியில் உள்ள அரசுப் பள்ளி கட்டடம் மழை காரணமாக சேதமடைந்துள்ளது. பள்ளி வளாகம், கட்டடம், அங்கன்வாடி மையம் ஆகியவற்றில் மழைநீர் தேங்கியதால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் அச்சம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் கேட்ட போது, பள்ளியைநேரில் ஆய்வு செய்து நடவடிக்கைஎடுப்பதாக தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே காசிபாளையம் ஆதிதிராவிடர் நலகுடியிருப்புப் பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கியதால் சேரும் சகதியுமாக காட்சியளிக்கின்றன. இதனால் அவ்வழியே சென்று வரும் தொடக்கப்பள்ளி மழலையர் அவதியடைந்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக பிளவக்கல் பெரியாறு அணையில் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அணையின் முழு கொள்ளளவு 47 அடியாக இருக்கும் நிலையில் தற்போதைய நீர்மட்டம் 42 அடியாக உள்ளது.
இதேபோல் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அணைக்கு நீர்வரத்து 11 ஆயிரத்து 445 கன அடியாக இருக்கும் நிலையில் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 250 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.