
மதுரையில் பெய்து வரும் கன மழையால் காக்காதோப்பு பகுதியில் இருந்த பழமையான 2 அடுக்கு கட்டடம் இடிந்து விழுந்தது. இடி தாக்கியதில் கட்டடம் இடிந்ததாகவும், அதில் யாரும் வசிக்காததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாகவும் தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.
நாகை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. சீர்காழி முதல் தரங்கம்பாடிவரை பெய்த தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் இரவு முழுவதும் பெய்த மழையில் சாலையில் தண்ணீர் தேங்கியது. அதில், அரசு பேருந்தும் சிக்கிக் கொண்டது. தாழ்வான பகுதிகளில் இருந்த கட்டடங்களையும் வெள்ளம் சூழ்ந்தது.
தென்காசி மாவட்டத்தில் 37 சென்டி மீட்டர் மழை பதிவாகியது. சில இடங்களில் பழைய கட்டடங்கள் இடிந்து விழுந்தன. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கன மழையால் வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் 38 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. வைகை, மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
ஈரோடு மல்லிநகரில் பெய்த மழையில் பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில் அடைப்பு ஏற்பட்டு வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததுள்ளது. அதனை சரி செய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரியிலும் கனமழை பெய்து வருகிறது.