தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை : எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்
அடுத்த 24 மணிநேரத்திற்கு, வடதமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும், 6 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்தியமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாகவும், தமிழக பகுதிகளில் அதனோடு இணைந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சேலம், தர்மபுரி, வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும். என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் வட தமிழக மாவட்டங்கள் குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில், புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் 6 சென்டிமீட்டரும், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், நீலகிரி மாவட்டம் தேவாலாவில் தலா 5 சென்டிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
மத்தியமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக இன்றும் நாளையும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.