தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறதா?
தென் தமிழகத்தில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.. அத்துடன் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும் இது, மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை மறுநாள் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள வானிலை எச்சரிக்கையை பற்றி விரிவாக பார்க்கலாம்..
இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிக்கிறது. இதன் தாக்கத்தால் அடுத்த 48 மணி நேரத்தில் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம் எனவும் அந்தமான் கடல் பகுதியில் இன்று உருவாகும் என இந்திய வானிலை ஆய்வுமையம் எதிர்பார்த்த குறைந்த காற்றழுத்தம் தாமதமாகும் எனவும் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்..
அத்துடன் நேற்று (21.11.2025) முதல் எதிர்பார்த்தபடி தமிழகத்தில் நான்காவது சுற்று மழை தொடங்கியுள்ளது. இந்த மழை 25.11.2025 வரை தொடரும். இதன்காரணமாக, தென் தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடுமென
தெரிவித்துள்ளார்.. இதில் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி ஆகிய மாவட்டங்களில் பரவலாக கனமழை முதல் மிக கனமழை பெய்யும் எனவும் பாம்பன், இராமேஸ்வரம், தங்கச்சிமடம், ஊத்து, நாலுமுக்கு, மஞ்சோலை பகுதி, தென்காசி மலைப்பகுதி, தூத்துக்குடி ஆகிய கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு என்றும் தெரிவித்துள்ளார்.. இதில் புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழையும் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதில் டெல்டா மண்டலமான கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களில் அவ்வப்போது மிதமானது முதல் கனமழை வரை பதிவாகும். மேலும் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், காரைக்கால் ஆகிய இடங்களில் அடுத்த 2-3 நாட்களுக்கு கடலோரத்தின் ஒரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.. மேற்கு உள் மாவட்டங்களான கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி மாவட்டங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமானது முதல் கனமழை பெய்யலாம்.
இதில் வட தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் அவ்வப்போது மிதமானது முதல் கனமழை, சில நேரங்களில் கனமழையும். வட உள் மாவட்டங்களில் அடுத்த 2-3 நாட்களுக்கு மாலை நேரத்தில் இடியுடன் கூடிய மழையும் தொடரும் என் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.. மொத்தத்தில், அடுத்த 2-3 நாட்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை வாய்ப்பு உள்ளது என்றும் தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமுதல் மிக கனமழை அதிகம் பெய்யும் என்றும் தெரிவித்துள்ளார்..

