இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. அக்.16 முதல் வடகிழக்குப் பருவமழை!
இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக நீலகிரி, கோவை, தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை , காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழகம், குமரிக்கடல், அரபிக்கடல் பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு சூறைக் காற்று வீசக் கூடும் என்பதால், மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் 16 முதல் 18ஆம் தேதிகளில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கான சாத்தியம் இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்மேற்குப் பருவமழை, வரும் 16 முதல்18ஆம் தேதிகளில் இந்திய பகுதிகளிலிருந்து விலகுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், வளிமண்டல கீழடுக்குகளில் கிழக்கு மற்றும் வடகிழக்கு திசை காற்று வீசக்கூடிய நிலையில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வடகிழக்குப் பருவ மழை 16 முதல் 18ஆம் தேதிகளில் தொடங்குவதற்கான சாத்தியம் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான், ”தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களுக்கு தற்போது மழைக்காலம். அக்டோபர் 17இல் இருந்து 20ஆம் தேதிக்குள் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கும். வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியதும், கடலோர மாவட்டங்களில் மழைப்பொழிவு தொடங்கும். அக்டோபர் 20-ஆம் தேதிக்கு பிறகு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், வடகிழக்கு பருவமழை காலத்தின் முதல் காற்றழுத்தத் தாழ்வு நிலை அக்டோபர் 20- க்கு பிறகு உருவாகக்கூடும்” என்றும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.