நிவர் புயல்: இன்று 3, நாளை 8 மாவட்டங்கள்... அதீத கனமழை எச்சரிக்கை!
தமிழகத்தில் புயல் காரணமாக 3 மாவட்டங்களில் இன்று அதீத கனமழை பெய்யும் எனவும் 8 மாவட்டங்களில் நாளை அதீத கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் “தற்போது வங்கக்கடலில் புதுச்சேரிக்கு அருகே 410 கி.மீ தொலைவிலும், சென்னையில் இருந்து 450 கி.மீ தொலைவிலும் புயல் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து நகராமல் மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணிநேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறக்கூடும். வடமேற்கு திசையில் நகர்ந்து மாமல்லபுரம் - காரைக்கால் இடையே புதுச்சேரிக்கு அருகே தீவிர புயலாக கரையை கடக்கும்.
இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 27-ஆம் தேதி வரை மழை தொடரும். அடுத்த 24 மணிநேரத்தில் கடலோர மாவட்டங்களில் பெரும்பான்மையான இடங்களிலும் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும். நாளை 25 ஆம் தேதி கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் உள்மாவட்டங்களில் பெரும்பான்மையான இடங்களிலும் மழை பெய்யக்கூடும்.
கனமழையை பொருத்தவரை 24 மணிநேரத்தில் நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும். திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும்.
நாளை திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவித்தார்.