“நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு” - வானிலை ஆய்வு மையம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கினாலும் சில நாட்கள் மட்டும் மழையை கொடுத்தது. பின்னர் பல நாட்கள் வறண்ட வானிலையே நீடித்த நிலையில், மீண்டும் தற்போது ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், “ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பசலனத்தால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
மேலும் கடலோரப்பகுதிகளில் மழை பெய்யக்கூடும். கன்னியாக்குமரி கடல் பகுதிகளில் 2 நாட்களுக்கு குறைக்காற்று வீசும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். சென்னை மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யும். அதிகபட்சமாக பாம்பன், தங்கச்சிமடத்தில் தலா 7 செ. மீ மழை பதிவாகியுள்ளது” எனத் தெரிவித்தார்.