திருவாரூரில் கனமழை: மீண்டும் மூழ்கும் சம்பா பயிர்
திருவாரூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
திருவாரூர், குடவாசல், நன்னிலம், பேரளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் பேருந்து நிலையம், கடைவீதிகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து செல்வதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. அதனால் சம்பா பயிர் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இன்று அதிகாலை வரை பதிவான மழை நிலவரப்படி, அதிகபட்சமாக நீடாமங்கலத்தில் 4.3 சென்டிமீட்டரும், வலங்கைமானில் 4 சென்டிமீட்டரும், நன்னிலத்தில் 3 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது. மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.