கனமழையால் நீரில் மூழ்கிய பயிர்கள்: டெல்டா விவசாயிகள் வேதனை
நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கிவிட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருவதால், விளை நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் சம்பா மற்றும் தாளடி சாகுபடி செய்திருந்த விவசாயிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். நாகை மாவட்டத்தில் மட்டும் 3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் செய்வதறியாது திகைத்துள்ளனர். உரிய வடிகால் வசதி ஏற்படுத்தாததன் காரணமாகவே வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்பதாக விவசாயிகள் புகார் கூறினர். தங்கள் நிலைமையை கவனத்தில் கொண்டு உரிய தீர்வு கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை 20 முதல் 25 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 30 நாட்களான சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை ஆய்வு செய்த அமைச்சர் காமராஜ், ஓரிரு நாட்களில் வயல்களில் இருந்து தண்ணீர் வடிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி தாங்கள் நிற்கதியாக நிற்கும் நிலையில், மழைநீரால் நெற்பயிர்கள் சேதமடையவில்லை என்ற அமைச்சர் துரைக்கண்ணுவின் பேச்சு மேலும் தங்களை காயப்படுத்தியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.