சென்னையில் விடிய விடிய மழை: வெள்ளக்காடான சாலைகள்
சென்னையில் நேற்றிரவு மீண்டும் பெய்த கனமழையால் நகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாகின. இதனால் வாகனங்களும், பேருந்துகளும் மழைநீரில் சிக்கித் தத்தளித்தன.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்காக பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மாம்பலம், அசோக் நகர், கீழ்பாக்கம், சேப்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, திருவான்மியூர், நீலாங்கரை, மேடவாக்கம் உள்ளிட்ட சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மடிப்பாக்கம், திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் தூக்கத்தை இழந்தனர். தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் பகுந்ததால் கீழ்த்தளத்தில் வசிப்போர் மாடிகளில் தஞ்சமடைந்தனர்.
மழையின் காரணமாக, சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்து பணி முடிந்து வீடு திரும்புவோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். கிண்டியில், கத்திப்பாரா மேம்பாலம் முடியும் பகுதியில் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கிக்கிடந்ததால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதனால், ஆலந்தூர் பகுதியிலிருந்து ஈக்காட்டுத்தாங்கலை சென்றடைய சுமார் ஒன்றரை மணி நேரம் பிடித்ததாக வாகனங்களில் வந்தவர்கள் தெரிவித்தனர். மழைநீர் அனைத்தும் கால்வாய் வழியாகச் சென்று கடலில் கலந்து வீணாவதாக பொதுமக்கள் கவலை தெரிவித்தனர்.