
சென்னையில் நேற்றிரவு 11 மணி அளவில் தொடங்கிய மழை தற்போது வரை நீடித்து வருகிறது. இந்த மழை இன்று காலை 7 மணி வரை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே தகவல் தெரிவித்திருந்த நிலையில், அதைத்தாண்டியும் பல இடங்களில் கனமழை நீடித்து வருகிறது.
இந்த மழை காரணமாக பல இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கத்திப்பாரா பாலம், ஈக்காட்டுத்தாங்கல் பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பித்துவருகின்றது. அதேபோல் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது. ஈக்காட்டுத்தாங்கல், வேளச்சேரி, தரமணி உள்ளிட்ட சில பகுதிகளில் மரங்கள் சாய்ந்துள்ளன.
இந்நிலையில், சென்னையில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். போலவே சென்னைக்கு வந்த சுமார் 10 விமானங்கள், பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன. மேற்கொண்டு களப்பணியில் அதிகாரிகளும், மாநகர பணியாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையை போலவே திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதிகளிலும் மழை இருப்பதால், அங்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.