கொடைக்கானல், மதுரையில் கனமழை : விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் 2 மணி நேரம் பரவலான மழை பெய்ததால் கீழ்மலை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் இன்று பரவலாக மழை பெய்தது. பிற்பகலில் நடுமலையில், துவங்கிய மழை, காற்றின் வேகத்தில் படர்ந்து, கீழ்மலை, மச்சூர், வடகரை பாறை, மயிலாடும்பாறை, ஊத்து, கும்பரையூர் மற்றும் பூலத்தூர் பகுதிகள் வரை 2 மணி நேரமாக பெய்தது.
இந்த மழையால் காய்ந்து வறட்சியில் இருந்த கீழ்மலைப்பகுதிகளில், நீர் ஆதாரம் பெருகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆரஞ்சு, காப்பி, சவ்சவ் உள்ளிட்ட பயிர்கள் செழிக்கும் என கீழ்மலை கிராம விவசாயிகள் கூறுகின்றனர். அத்துடன் மழையால் நீர்நிலைகள் உயர்ந்து, நிலத்தடி நீர் அதிகரிக்கும் என்பதால் மக்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இதேபோன்று மதுரையில் இன்று மாலை மிதமான மழை பெய்தது. மதுரை மாநகர் பகுதிகளான காளவாசல், தல்லாகுளம், அரசரடி உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையினால் பூமி வெப்பம் தணிந்து குளிர்ச்சியாக காணப்பட்டது. கடந்த சில வாரங்களாக கோடை வெப்பம் வாட்டி வந்த நிலையில், இன்று பெய்த மழையினால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.