\
Heavy rain
Heavy rain web

சென்னையில் கொட்டித் தீர்த்த மழை.. வானில் தத்தளித்த 9 விமானங்கள்.. ஸ்தம்பித்த விமான நிலையம்!

சென்னையில் பெய்த திடீர் கனமழை காரணமாக ஏற்பட்ட மோசமான வானிலையால், சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் 9 விமானங்கள் நீண்ட நேரம் வானில் வட்டமடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Published on

வங்கக்கடலில் நிலவும் வானிலை மற்றம் காரணமாக, சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே மிதமான மழை முதல் சில இடங்களில் கனமழை வரை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று இரவு 7:30 மணிக்கு மேல் திடீரென பலத்த காற்றுடன் கனமழை பெய்யத் தொடங்கியது. சுமார் 8:15 மணி வரை கனமழையும், பலத்த காற்றும் நீடித்தது. இதனால் சென்னை விமான நிலையப் பகுதிகளில் மோசமான வானிலை நிலவியது.

MAP
MAPPT

அப்போது, சென்னையில் தரையிறங்க வந்துகொண்டிருந்த டெல்லி, விசாகப்பட்டினம், இலங்கை, ஹைதராபாத், மைசூரு, மும்பை, துபாய் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்த 9 விமானங்கள், மோசமான வானிலை காரணமாக சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்துத் தத்தளித்தன.

இதேபோல், சென்னையில் இருந்து புறப்படத் தயாராக இருந்த ஹைதராபாத், கொச்சி, டெல்லி, இலங்கை, கொல்கத்தா, திருவனந்தபுரம், பெங்களூரு, திருச்சி மற்றும் கோவை உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல வேண்டிய 11 விமானங்களும் புறப்பட முடியாமல் சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன.

CHENNAI AIRPORT
CHENNAI AIRPORT ANI

இதனால் விமான நிலையத்தில் பரபரப்பான சூழல் நிலவியது. பின்னர் மழையும், பலத்த காற்றும் ஓய்ந்ததும், வானில் வட்டமடித்துக் கொண்டிருந்த விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கின. அதேபோல், சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்களும் சுமார் ஒரு மணி நேரம் வரை தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன. விமானங்கள் தாமதமானதால், சென்னை விமான நிலையத்தில் காத்திருந்த பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

செய்தியாளர் ராஜ்குமார்.ர

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com