தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
அடுத்த 24 மணி நேரத்தில் தென்தமிழகத்தின் ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் வானிலை நிலவரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை மையத்தின் இயக்குநர் பாலசந்திரன், மன்னார் வளைகுடா, லட்சத்தீவுகள் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கையை ஒட்டியுள்ள கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்பதால் அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். அதைத்தொடர்ந்து வானிலை சார்பில் அறிவிப்புகளை அவர் கூறினார்.
அதன்படி, அடுத்த 24 மணி நேரத்தில் தென்தமிழக பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொருத்தவரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக மேட்டுப்பாளையத்தில் 18 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. குன்னூரில் 13 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மதுராந்தகத்தில் 10 சென்டி மீட்டரும் செம்பரம்பாக்கத்தில் 9 சென்டி மீட்டரும் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 8 சென்டி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழைக் காலத்தில் 40 சென்டி மீட்டர் அளவுக்கு மழை பதிவாகி உள்ளது. தற்போதைய நிலவரப்படி 11 சதவிகிதம் அதிக மழை கிடைத்துள்ளது. சென்னையைப் பொருத்தவரை இதுவரை இயல்பை விட 8 சதவிகிதம் குறைவாகவே மழை கிடைத்துள்ளது என வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.