கீழடியில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக அகழாய்வு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த ஜூன் 13ம் தேதி முதல் 5ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்து வருகிறது. இந்தப் பணிகள் இன்றுடன் நிறைவடைவதாக இருந்தது. இந்நிலையில் மேலும் 2 வாரங்கள் நீடிக்கப்படுவதாக தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் அறிவித்தார்.
பணிகள் தொடர்ந்து நடைபெற இருந்த நிலையில் நேற்று நள்ளிரவு பெய்த கணமழையினால் அகழாய்விற்காகத் தோண்டப் பட்ட 52 குழிகளிலும் மழை நீர் தேங்கியது. இதனால் மழை நீரை வெளியேற்றும் பணியில் 110 தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மோட்டார் மூலமாகவும் மழை நீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மழை நீரை முழுமையாக வெளியேற்றிய பின்னர் அகழாய்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும் என தொல்லியல் துறை யினர் தெரிவித்துள்ளனர்.