மழை எதிரொலி: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இரவு முதல் நகரின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்த நிலையில் மாவட்ட ஆட்சியர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
சென்னையில் ஈக்காட்டுத்தாங்கல், பாடி, கிண்டி, ராயபுரம், கோட்டூர், கொடுங்கையூர், ஆதம்பாக்கம், திருவொற்றியூர், வேளச்சேரி, வளசரவாக்கம், அம்பத்தூர் என சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் நேற்றிரவும் இன்று அதிகாலையும் கன மழை பெய்தது. புறநகர் பகுதிகளான பல்லாவரம், தாம்பரம் பகுதிகளில் மழை தொடர்ந்தது. வடகிழக்கு பருவமழை தொடங்கி பலத்த மழை பெய்து வந்த நிலையில், கடந்த சில நாள்களாக மழை இல்லாமல் இருந்தது. தற்போது மீண்டும் கன மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
மழையின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.இதற்கிடையே, அடுத்த 24 மணி நேரத்தில், வடதமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.