ஆதரவற்ற 500 பேருக்கு ஆரோக்கியமான மதிய உணவு - கிராம மக்களின் நெகிழ்ச்சியான சேவை

ஆதரவற்ற 500 பேருக்கு ஆரோக்கியமான மதிய உணவு - கிராம மக்களின் நெகிழ்ச்சியான சேவை
ஆதரவற்ற 500 பேருக்கு ஆரோக்கியமான மதிய உணவு - கிராம மக்களின் நெகிழ்ச்சியான சேவை

கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆதரவற்ற சுமார் 500 பேருக்கு தினமும் விதவிதமாக ஆரோக்கியமான மதிய உணவு அளித்து வரும் கிராம மக்களின் சேவை நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. 

ராமநாதபுரம் அருகே உள்ளது முதுனால் கிராமம். இங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அங்கு அவர்களாகவே கொரோனா காலங்களில் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்க வேண்டும் எனத் திட்டமிட்டு சுமார் நான்கு பேர் தங்களால் முடிந்த பண உதவிகளை செய்து கடந்த 5 ஆம் தேதி முதல் மதிய உணவு மட்டும் வழங்குவது என திட்டமிட்டு உணவு சமைத்து கொடுக்க முன்வந்தனர். இவர்கள் செய்கின்ற சேவையை அறிந்த முதுனால் கிராம மக்களும் சேர்ந்து உணவளிக்க முன்வந்தனர்.

ஒவ்வொரு குடும்பத்தினரும், இளைஞர்களும் தாமாக முன்வந்து மதிய உணவிற்கு தேவைப்படுகின்ற அனைத்து பொருட்களான அரிசி, எண்ணெய், காய்கறி மற்றும் தேவைப்படுகின்ற அனைத்து பொருட்களையும் என்ன செலவு ஆகிறதோ அதற்கு உண்டான பணம் மற்றும் பொருட்கள் வாங்கி கொடுத்து உதவி செய்து வருகின்றனர்.

தினமும் ஆரோக்கியமான உணவான தக்காளி சாதம், எலுமிச்சை சாதம், புளி சாதம், வெஜிடேபிள் பிரியாணி, நெய் சாதம் மற்றும் முட்டை, சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக உணவு தயாரித்து ஆதரவற்றவர்களுக்கு வழங்கி வருகின்றனர்.

இதற்கு சுமார் ஒரு நாளைக்கு மட்டும் 10,000 முதல் 15,000 வரை செலவு செய்வதாக அவர்கள் கூறுகின்றனர். இவர்கள்
தினமும் காலை 7 மணிக்கு பணியை துவங்கி கிடுகிடுவென உணவினைத் தயார் செய்து மதியம் 12 மணியளவில் ஆட்டோவில் ஏற்றி உணவு விநியோகம் செய்கின்றனர்.

ராமநாதபுரம் நகர் பகுதி ரோமன் சர்ச், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆதரவின்றி இருக்கும் நபர்கள், நோயாளியின் உறவினர்கள் என மதிய உணவு சிறப்பாக வழங்கி வருகின்றனர். தொடர்ந்து இவர்கள் கொரோனா ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் வரை உணவளித்து வருவோம் எனவும் தமிழக அரசுக்கு உறுதுணையாக இருப்போம் எனவும் தெரிவித்தனர். ஆதரவற்றவர்களுக்கு ஒரு கிராமமே சேர்ந்து உணவு அளித்து வருவது மிகவும் வரவேற்கத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com