செங்கல்பட்டு அரசு மருத்துவமனையை சுற்றி சுகாதார சீர்கேடு
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையை சுற்றி சுகாதார சீர்கேடு நிலவுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், வந்தவாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து பல்வேறு சிகிச்சைக்கு நாள் ஒன்றுக்கு 3000-க்கும் மேற்பட்டவர்கள் வெளிநோயாளிகளாக வந்து செல்கின்றனர். 350-க்கும் மேற்பட்டடோர் உள்நோயாளிகளாக உள்ளனர்.
தற்போது தமிழ்நாடு முழுவதும் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் பலர் இறந்து வருகின்றனர். அதற்கு சுகாதார சீர்கேடும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு பகுதியை சுற்றி கழிநீர் குப்பைகள் ஏராளமாக உள்ளதாக கூறப்படுகிறது. நோயினை குணப்படுத்துவதற்காக மருத்துவமனைக்கு வந்தால், மருத்துவமனையை சுற்றி இருக்கும் கழிவுகளால் தொற்று நோய் பரவும் நிலை உள்ளதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். ஆகவே மருத்துவமனை வளாகத்தில் தேங்கி கிடக்கும் கழிவு நீர் மற்றும் குப்பைகளை அகற்றி நோயாளிகளை பாதுக்காக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.