5 மாதங்கள் காலாவதியான மாத்திரைகளை வழங்கிய சுகாதார துறையினர்- மக்கள் அதிர்ச்சி
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பேரூராட்சிக்குட்பட்ட 4வது வார்டில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்குள்ளான பகுதியில் உள்ள வீடுகளுக்கு சுகாதார துறையினர் 5 மாதங்கள் காலாவதியான சத்து மாத்திரைகளை வழங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெரு முழுவதும் வீடு வீடாகச் சென்று சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் செவிலியர்கள் சத்து மாத்திரைகளை காலாவதி ஆனது என்று கூட தெரியாமல் வழங்கியுள்ளனர்.இதை அறிந்த அப்பகுதி மக்கள் மாவட்ட தகவல் மையத்திற்கு தொடர்பு கொண்டு தகவல் அளித்துள்ளனர். பின்னர் மீண்டும் சுகாதாரப் செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் தெருவில் வழங்கிய மாத்திரைகளை பெறுவதற்கு சென்றுள்ளனர். அப்போது பொதுமக்களுக்கும் பணியாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து காலாவதியான மாத்திரைகளை வழங்கிய வீடுகளில் மாத்திரைகளை பெற்று பணியாளர்கள் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினியிடம் கேட்டதற்கு உடனடியாக மாத்திரைகள் வழங்கிய வீடுகளில் ஆய்வு மேற்கொண்டு மாத்திரைகளை திரும்ப பெறப்பட்டு புதிய மாத்திரைகள் வழங்கப்படும் எனவும், மாத்திரைகள் வழங்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.