தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் அதிகரித்த டெங்கு பாதிப்பு - சுகாதாரத்துறை எச்சரிக்கை

தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் அதிகரித்த டெங்கு பாதிப்பு - சுகாதாரத்துறை எச்சரிக்கை
தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் அதிகரித்த டெங்கு பாதிப்பு - சுகாதாரத்துறை எச்சரிக்கை
Published on
தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 164 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது எனவும், சென்னை உட்பட வட மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.
நன்னீரில் உற்த்தியாகும் ஏடிஸ் கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சல் ஆண்டு முழுவதுமே கண்டறியப்படும் நோய்தான் என்றாலும், மழைக்காலங்களில் கூடுதலாக பாதிப்பு ஏற்படுகிறது. எனவே தான் வீடுகளைச் சுற்றி மழைநீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுமாறும், டயர்கள் உள்ளிட்ட எந்த பொருட்களிலும் நன்னீர் தேங்காமல் கவனமுடன் இருக்கும்படியும் பொது சுகாதாரத்துறை அறிவுறுத்துகிறது. 
மழைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில் செப்டம்பர் 29 ஆம் தேதி தொடங்கி இதுவரையிலான ஒரு வாரத்தில் மட்டும் தமிழகத்தில் 198 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 29 மற்றும் 30 தேதிகளில் தலா 33 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. அக்டோபர் 1ஆம் தேதி 29 பேருக்கு உறுதி செய்யப்பட்ட பாதிப்பு, 2 மற்றும் 3ஆம் தேதிகளில் 13 மற்றும் 16ஆக குறைந்து 4ஆம் தேதி மீண்டும் 30 ஆக அதிகரித்தது.
தற்போதைய நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஒப்பீட்டு அளவில் சற்று அதிகமாக இருப்பதாகவும்,  திருச்சி, தஞ்சை, திண்டுக்கல் உள்ளிட்ட மத்திய பகுதிகளில் பாதிப்பு குறைவு எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதேவேளையில் இந்த ஒரு மாதத்தில் மழை பாதிப்பால் தண்ணீர் தேங்கத் தொடங்கினால் மத்திய பகுதிகள் மட்டுமல்லாது நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் பாதிப்பு ஏற்படலாம் என எச்சரிக்கின்றனர். 
மழை தொடர்ந்து நீடித்து வருவதால் வரும் நாட்களிலும் டெங்கு பாதிப்பு உயர வாய்ப்புள்ளதால் கொசுக்கள் கடிக்காமல் கவனமுடன் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளுமாறும், கொசுவலைகளை பயன்படுத்துமாறும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். மேலும், டெங்கு காய்ச்சல் பாதிப்பைக் கட்டுப்படுத்த 476 நடமாடும் மருத்துவக் குழுக்கள் காய்ச்சல் பாதித்த இடங்களுக்குச் சென்று சிகிச்சை முகாம்களை நடத்தி வருவதாகவும், 785 மருத்துவக் குழுக்கள் பள்ளிகள்தோறும் சென்று காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என கண்டறிந்து, டெங்கு பரவல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com