வெளிநாட்டு கைதிகளுக்கு கொரோனா என வதந்தி : புழல் சிறை தலைமை காவலர் தற்காலிக பணிநீக்கம்
புழல் சிறையில் உள்ள வெளிநாட்டு கைதிகளுக்கு கொரோனா என வதந்தி பரப்பியதாக முதன்மை தலைமை காவலர் தற்காலிக பணிநீக்கம் செய்யபபட்டுள்ளார்.
சென்னை புழல் மத்திய சிறையின் முதன்மை தலைமை காவலராக இருப்பவர் சரவணகுமார். இவர் வெளிநாட்டு கைதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு பகுதியில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி இவர் விடுப்பு எடுத்துவிட்டு, உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவுக்கவில்லை என கூறப்படுகிறது.
மேலும்,மறுநாள் பணிக்கு திரும்பிய சரவண குமார், வெளிநாட்டு கைதிகள் அறைக்கு பணிக்கு செல்ல முடியாது எனவும், அவர்களில் 3 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதாகவும் கூறியிருக்கிறார். மருத்துவர்கள் அதனை மறைப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இதனைத்தொடர்ந்து முதன்மை தலைமை காவலர் சரவணகுமார் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டதாக சிறைத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே புழல் சிறையில் உள்ள கைதிகள் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என சிறைத்துறை விளக்கம் அளித்துள்ளது.