மணல் திருட்டை தடுப்பது தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி
தமிழகம் முழுவதும் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் எத்தனை? அவற்றுள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ப்பட்டுள்ள வழக்குகள் எத்தனை? என உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
புதுக்கோட்டையைச் சேர்ந்த மணிகண்டன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,"புதுக்கோட்டை மாவட்டத்தில் வெள்ளாறு, அக்னி ஆறு, குண்டாறு, பாம்பாறு உள்ளிட்ட முக்கிய ஆறுகள் உள்ளன. இவற்றில் சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுவதால் நீர் மட்டம் மிகவும் ஆழத்திற்கு சென்றுவிட்டது. சவடு மண் எடுப்பதாக கூறி அதிகளவில் மணல் திருட்டு நடைபெறுகிறது. ஆனால் அதிகாரிகள் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டு சுங்கச்சாவடிகள் இருப்பினும், திருட்டு மணல் தடுக்கப்படுவதில்லை. அதிகாரிகளும் இதற்கு துணை போகும் நிலை உள்ளது. ஆகவே, மணல் திருட்டை தடுக்க முக்கிய சாலைகளில் குறிப்பிட்ட இடைவெளியில் இணைய வசதியுடன் கூடிய சிசிடிவி கேமராக்களை பொருத்த உத்தரவிட வேண்டும்"என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு, தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் மணல் எடுத்து செல்லும் லாரிகளின் எடையை கணக்கிட எடை மேடை அமைக்கப்பட்டுள்ளதா? தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் இருந்து மணலை எடுத்து செல்லும் லாரிகளை கண்காணிக்கவும்,மணல் திருட்டை தடுக்கவும் கனிம வள சட்டம் 1957 ன் படி சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதா? எத்தனை சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது? மணல் திருட்டைத் தடுக்க, கனிம வள சட்டத்தில் கூறியுள்ளபடி எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் என்ன? கடந்த 5ஆண்டுகளில், தமிழகம் முழுவதும் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் எத்தனை? அவற்றுள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் எத்தனை? தமிழகத்திலிருந்து மணல் பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறதா?
அது தொடர்பாக ஏதேனும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா? வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதா? மணல் கொள்ளை உள்ளிட்ட கனிமவள விதிகளை மீறும் குற்றங்கள் தொடர்பாக சிறப்பு நீதிமன்றம் அமைக்க ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? மணல் திருட்டை தடுப்பது தொடர்பான நீதிமன்ற உத்தரவு முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பினர். மேலும் இதுகுறித்து தமிழக அரசு, பொதுப்பணித்துறை செயலர், வருவாய் துறை செயலர் உள்ளிட்டோர் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 15 ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.