பொள்ளாச்சி பாலியல் கொடூரம் - விவரங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு
பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பாக வழக்கின் தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய அரசுத்தரப்புக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொள்ளாச்சியில், மாணவிகள் மற்றும் பெண்களை காதலிப்பதாக கூறி ஏமாற்றி, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில், மணிகண்டன் என்பவர் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
பெண்களை வீடியோ எடுத்து மிரட்டியது தொடர்பாக சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அதேபோல், இந்த விவகாரம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்த மாணவியின் சகோதரருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக செந்தில், பாபு, வசந்தகுமார், நாகராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
புகார் அளித்த மாணவியின் சகோதரரை மிரட்டிய விவகாரத்தில், தானும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக மணிகண்டன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.இதனையடுத்து, பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கின் விவரங்களை தாக்கல் செய்ய காவல்துறை, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கு விசாரணை மார்ச் 14ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.