நெடுஞ்சாலைகள், நடைபாதைகளில் அனுமதியின்றி சிலை வைத்தால் கடும் நடவடிக்கை - ஐகோர்ட் கிளை

நெடுஞ்சாலைகள், நடைபாதைகளில் அனுமதியின்றி சிலை வைத்தால் கடும் நடவடிக்கை - ஐகோர்ட் கிளை

நெடுஞ்சாலைகள், நடைபாதைகளில் அனுமதியின்றி சிலை வைத்தால் கடும் நடவடிக்கை - ஐகோர்ட் கிளை
Published on

நெடுஞ்சாலைகள், சாலைகள், நடைபாதைகளில் அனுமதியின்றி சிலை வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது தொடர்பான தமிழக அரசின் அரசாணை (183ன்) படி 6 வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மண்ணச்சநல்லூர் தாலுகா, மணியங்குறிச்சி கிராமத்தில் அனுமதியின்றி முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகள் அமைக்க தடை கோரிய வழக்கில் நீதிமன்றம் இவ்வாறூ உத்தரவிட்டுள்ளது. 

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுகாவை சேர்ந்த ராமச்சந்திரன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தாலுகாவிலுள்ள மணியங்குறிச்சி கிராமம் பல சிறு கிராமங்களை உள்ளடக்கியதாக உள்ளது. இந்தக் கிராமங்களின் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. மணியங்குறிச்சி கிராமத்தில் திருச்சி பெரம்பலூரை இணைக்கும் 13 அடி சாலை உள்ளது.

இந்த சாலையில் அதிமுகவை சேர்ந்த நிர்வாகி(செல்வராஜ்- மணியங்குறிச்சி கிராம செயலாளர்) உரிய அனுமதி பெறாமல் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலை அமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார். சிலை அமைக்க உள்ள இடம் அரசு பொது நிலமாக உள்ளது. இப்பகுதியில் சிலை அமைப்பதால் விவசாயப் பொருள்களை எடுத்துச் செல்லும் கனரக வாகனங்கள் திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்படும். அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே இப்பகுதியில் அதிக அளவு வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, சிலை அமைக்கும் பணிக்கு இடைக்காலத் தடை விதிப்பதோடு, அப்பகுதியில் சிலை அமைப்பதற்கு அனுமதி வழங்கக்கூடாது என உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், "தமிழக அரசு சார்பாக சாலைகளில் சிலை வைப்பதற்கான அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை. மேலும் தமிழக அரசு ஆணை 183/2017-ன் படி நெடுஞ்சாலைகள், சாலைகள், நடைபாதைகள் ஆகிய பகுதிகளில் அனுமதியின்றி சிலை வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் சட்டத்திட்டங்களை கடுமையாக நடைமுறைபடுத்த வேண்டும் என தெரிவித்தனர். தொடர்ந்து, தமிழக அரசின் அரசாணை 183/2017-ன் படி 6 வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com