திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் அட்டவணை இருக்கிறதா..?: நீதிமன்றம் கிடுக்குப்பிடி
தமிழகத்தில் காலியாக உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலை நடத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பதில்மனு தாக்கல் செய்ய தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," தமிழகத்தில் திருவாரூர், திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. தேர்தல் விதிமுறைப்படி சட்டசபை தொகுதி காலியாக உள்ளது என அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குள் இடைதேர்தலை நடத்த வேண்டும் என விதிகள் உள்ளது.
ஆனால் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தமிழக தலைமை செயலர் அனுப்பிய கடிதத்தில், வடகிழக்கு பருவமழை காலத்தில் அதிக மழைபொழிவுக்கு வாய்ப்பிருப்பதால் இரண்டு தொகுதிகளிலும் இடைதேர்தலை தற்போது நடத்த வேண்டாம் என பரிந்துரை செய்திருந்தார். இது ஏற்ககூடிய காரணம் இல்லை. மேலும், திருப்பரங்குன்றம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ போஸ் வெற்றி பெற்றது செல்லாது என அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சரவணன் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், போஸ் உயிரிழந்துவிட்டார். இதனாலும் தேர்தலை தள்ளிவைக்க முடியாது.
இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது இரண்டு தொகுதி இடைதேர்தலை நடத்தினால் தேர்தல் முடிவுகள் அரசியல் கட்சிகளுக்கிடையே பெரும் மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்பதால் தமிழக அரசு இடைதேர்தலை நடத்த ஆர்வம் காட்டவில்லை. ஆகவே, தேர்தல் விதிமுறைப்படி சட்டசபை தொகுதி காலியாக உள்ளது என அறிவிக்கபட்ட நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குள் இடைதேர்தலை நடத்த வேண்டும் என்ற விதிமுறையை அமல்படுத்தும் விதமாக திருப்பரங்குன்றம், திருவாரூர் சட்டசபை தொகுதி இடைதேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு இரு தொகுதிகளிலும் தேர்தலை நடத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பதில் மனு தாக்கல் செய்ய தமிழக தலைமை தேர்தல் ஆணையருக்கு உத்தரவிட்டனர். மேலும், தேர்தலுக்கான கால அட்டவணை ஏதுமிருப்பின் அதையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

