ஹாசினி கொலைக் குற்றவாளியை பிடிக்க மேலும் ஒரு தனிப்படை
மும்பையில் தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்ட சிறுமி ஹாசினி கொலை வழக்கு குற்றவாளி தஷ்வந்த் தப்பியோடியுள்ளார். அவரை பிடிக்க மேலும் ஒரு தனிப்படை மும்பை விரைந்துள்ளது.
சென்னையில் சிறுமி ஹாசினியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த், நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்திருந்தார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை சென்னை குன்றத்தூரில் வீட்டில் இருந்த தனது தாயையும் கொன்றுவிட்டு, நகைகளுடன் தஷ்வந்த் தப்பி ஓடிவிட்டார். அவரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் தலைமறைவாக இருந்த தஷ்வந்தை, மும்பையில் கைது செய்தனர்.
மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு, விமான நிலையத்திற்கு தஷ்வந்தை போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது கழிவறை செல்ல வேண்டும் என்று கூறிய தஷ்வந்த், போலீசாரின் பிடியில் இருந்து தப்பியோடியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மும்பை போலீசார் உதவியுடன், தமிழக போலீசார் தஷ்வந்தை தீவிரமாக தேடி வருகின்றனர். தஷ்வந்தை பிடிக்கும் பணியில் ஏற்கனவே 3 தனிப்படையினர் ஈடுபட்டுள்ள நிலையில் கூடுதலாக ஒரு தனிப்படை காவலர்கள்
மும்பை விரைந்துள்ளனர்.