இபிஎஸ் முதல் கமல்ஹாசன் வரை; தமிழக அரசியல் தலைவர்களின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துச் செய்திகள்!

தமிழக மக்களுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அரசியல் தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்து
அரசியல் தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்துபுதிய தலைமுறை

தமிழக மக்களுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி

தமிழக எதிர்க்கட்சித்தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில்,

"மலரும் புத்தாண்டு, மக்களுடைய துன்பங்கள் விலகி இன்பங்கள் பெருகவும், அனைவரது வாழ்விலும் அன்பையும், மகிழ்ச்சியையும், நோய் இல்லாத வாழ்வையும் குறைவில்லாத செல்வத்தையும் வழங்கும் ஆண்டாக அமையவும், இறைவனை பிரார்த்தித்துக்கொள்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.

ஓ. பன்னீர்செல்வம்

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில், ”அகம்பாவம், ஆணவம், துரோகம், நாகரிகமற்ற பேச்சு போன்றவை அகன்று, அன்பு, அமைதி, எளிமை, சகோதரத்துவம், சமத்துவம் ஆகியவை வளரும் ஆண்டாக 2024 ஆம் ஆண்டு மலரட்டும்.” என குறிப்பிட்டுள்ளார்.

ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், ”கவலைகளைப் போக்கி மகிழ்ச்சியை வழங்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த புத்தாண்டை வரவேற்போம். இந்த புத்தாண்டில் புதிய பாதை தெரியும் என்றும், புதிய வெளிச்சம் பிறக்கும்.2024ஆம் ஆண்டு நாம் எதிர்பார்த்ததைப் போல இனிப்பாக இருக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.

வைகோ

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில்,

வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சியில் அமர்வதை உறுதிபடுத்தவேண்டும். இந்திய ஜனநாயகத்தை பாதுகாக்க அனைவரும் இந்த புத்தாண்டில் சூளுரைக்கவேண்டும்.”என கேட்டுக்கொண்டார்.

கே.எஸ்.அழகிரி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ”பிறக்கப்போகும் இந்த புத்தாண்டு, ஜனநாயக விரோத பாசிச பாஜக ஆட்சி அகற்றப்பட்டு மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சி அமைய வழிவகுக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில்,

அர்ப்பணிப்புடன் தொடர்ச்சியான செயல்பாடுகளால், தளராத முயற்சிகளால் புதிய உயரங்களை அடையும் வாய்ப்பாக இந்த புத்தாண்டை ஆக்குவோம்.” என்று தெரிவித்துள்ளார்.

பாரிவேந்தர்

இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவரும், பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான பாரிவேந்தர் வெளியிட்ட அறிக்கையில்,

”பிறக்கும் புத்தாண்டில் நாட்டிலுள்ள அனைத்து துறைகளும் செழித்தோங்கி, மக்களின் பொருளாதாரம் மேம்படட்டும்.மக்களின் துன்பங்கள் நீங்கி, அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியும், வளர்ச்சியும் பெருக இந்த ஆங்கில புத்தாண்டு வழிவகுக்க வேண்டும்“ என குறிப்பிட்டுள்ளார்.

டி.டி.வி. தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்ட அறிக்கையில், ”மலரும் புத்தாண்டு, தமிழக மக்களுக்கு உயர்வான வாழ்க்கையையும், நீங்காத வளங்களையும், நிறைவான மகிழ்ச்சி மற்றும் மன உறுதியை தரும் ஆண்டாக அமையட்டும்.” என வாழ்த்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துக்கொண்டன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com