அனுமன் ஜெயந்தி: நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 14 லட்சம் ரூபாய் மதிப்பில் வடை அலங்காரம்
அனுமன் ஜெயந்தியையொட்டி இன்று நாமக்கல்லில் உள்ள பிரசித்திபெற்ற ஆஞ்சநேயருக்கு 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒரு லட்சத்து 8 வடை மாலை சாற்றப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் வரும் மூல நட்சத்திரத்தன்று அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், நாமக்கல்லில் ஒரே கல்லில் ஆன 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயருக்கு, கடந்த 4 நாட்களாக 14 லட்சம் ரூபாய் செலவில் ஒரு லட்சத்து 8 வடைகள் தயார் செய்யப்பட்டு, மாலையாக அணிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்ட நிலையில், தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களைச் சேர்ந்த ஏராளாமான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து காலை 10 மணியளவில் ஆஞ்சநேயருக்கு 10 ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகமும், 2 டன் வண்ண பூக்களால் அலங்காரமும் செய்யப்பட உள்ளது. முன்னதாக, பக்தர்கள் முகக்கவசம் அணிந்து வருவது உறுதி செய்யப்பட்டு, உடல்வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பின்னரே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். 800க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.