“கடைவிரித்தோம் கொள்வாரில்லை” - மதுரை கொலு பொம்மை உற்பத்தியாளர்கள் வேதனை

“கடைவிரித்தோம் கொள்வாரில்லை” - மதுரை கொலு பொம்மை உற்பத்தியாளர்கள் வேதனை
“கடைவிரித்தோம் கொள்வாரில்லை” - மதுரை கொலு பொம்மை உற்பத்தியாளர்கள் வேதனை

கொரோனா பாதிப்பு மதுரை விளாச்சேரியில் 65 ஆண்டுகளாக சிறப்பான முறையில் நடைபெற்று வந்த கொலு பொம்மை உற்பத்தியை கேள்விக்குறியாக்கி இருக்கிறது. நலிவடைந்த கொலு பொம்மை உற்பத்தியை மீட்டெடுக்க அரசு கைகொடுக்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். 

மதுரை விளாச்சேரி என்றவுடன் அனைவருக்கும் நினைவில் வருவது மண் பொம்மைகள் உள்ளிட்ட கைவினைப் பொருட்கள்தான். கைத்தொழிலை குடிசைத் தொழிலாக இந்த கிராம மக்கள் அனைவரும் மேற்கொண்டுவரும் நிலையில் 80 சதவீதம் பேர் பெண்கள் மட்டுமே மேற்கொண்டு வருவதால் பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் பிரதான தொழிலாலக உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 200 கூடங்கள் அமைத்து நடைபெறும் இந்த குடிசைத்தொழிலில் மூலமாக இந்த கிராமம் மட்டுமல்லாமல் மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் களிமண்ணாலும், பிளாஸ்டர் பாலிஷ் எனப்படும் மாவு, காகிதக்கூழ் ஆகியவற்றைக் கொண்டு சிறுவர்கள் விளையாடும் பொம்மைகள், சுவாமி சிலைகள், அகல் விளக்குகள், மண் பானைகள், கொலு பொம்மைகள், கிறிஸ்துமஸ் குடில் பொம்மைகள், நேர்த்திக்கடன் பொம்மைகள், தேச தலைவர்களின் சிலை வடிவ பொம்மைகள் என எண்ணற்ற வகை, வண்ணங்கள் மற்றும் வடிவங்களிலும் தத்ரூபமாக பொம்மைகள் தயாரித்துவருகின்றனர். இவை தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் வெளி நாடுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தற்பொழுது நவராத்திரி கொலு சீசன் என்பதால் கொலு பொம்மைகள் உற்பத்தி பணியில் அனைவரும் தீவிரம்காட்டி வருகின்றனர். 6 இஞ்ச் முதல் 3 அடி வரையிலான சுமார் 2 ஆயிரம் வகையான கொலு பொம்மைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. 50 ரூபாய் முதல் 4000 ஆயிரம் ரூபாய் வரையிலான பல்வேறு வடிவங்களில் பொம்மைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு புதிய வரவாக கிராம சபை கூட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கிராம சபை கூட்டம் கொலு அறிமுகப்படுத்தபட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கொரோனோ பாதிப்பிற்கு முன்புவரை கொலு பொம்மை நல்லமுறையில் விற்பனையாகி வந்ததாக கூறும் உற்பத்தியாளர்கள் கொரோனோ பொதுமுடக்கம் காரணமாக கடந்த 2 சீசனில் விற்பனை குறைந்து உற்பத்தியும் சரி பாதியாக குறைந்துள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர். இதனால் இதனை நம்பியுள்ள தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறும் உற்பத்தியாளர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் 30 பேர் பணிபுரிந்த நிலையில் தற்பொழுது 15 பேர் மட்டுமே பணிபுரியும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள்.

வழக்கமான விற்பனை இல்லாமல் உற்பத்தி பாதித்துள்ள நிலையில் பொம்மை தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படும் பெயிண்ட், மண், வைக்கோல் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது தங்களுக்கு பெறும் சுமையை தந்துள்ளதாகவும் விற்பனை குறைவு என்பதால் எந்தவித விலையேற்றமும் இல்லை எனவும் கூறுகிறார்கள். கடந்த பல ஆண்டுகளாக வெளிநாடுகளில் கொலு பொம்மை விற்பனையாகி வந்த நிலையில் தொடர்ந்து 2 சீசனில் கொரோனோ பாதிப்பு காரணமாக வெளி நாடுகளில் ஏற்றுமதி முற்றிலும் முடங்கிவிட்டதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.



கொரோனோ பாதிப்பிற்கு பின்னர் நேரடியாக வந்து கொலு பொம்மை வாங்குபவர்களின் எண்ணிக்கை 20 முதல் 30 சதவீதம் குறைந்துள்ளதாக கூறும் உற்பத்தியாளர்கள் வாட்ஸாப் உள்ளிட்ட ஆன்லைன் ஆர்டர்கள் வழக்கமான அளவில் உள்ளதாகவும் இருப்பினும் மக்களின் ஒத்துழைப்பால் இந்த தொழிலை விடாமல் செய்து வருவதாகவும் பல தலைமுறைகளாக செய்து வரும் இந்த தொழில் நலிவடைந்து வருவதாக வேதனை தெரிவிக்கும் இவர்கள் தொட்ட தொழிலை விட்டுவிட கூடாது என்பதற்காக பல சவால்களை கடந்தும் இந்த தொழிலை மேற்கொண்டு வருவதாகவும் கூறுகின்றனர்.

அரசு இந்த தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்ல கடன் உதவிகள் செய்வதுடன் இதனை ஆர்வம் உள்ள அனைத்து தரப்பினரும் பணி மேற்கொள்ளும் வகையில் பயிற்சிக்கூடம் அமைத்து தங்களுக்கு பயிற்சி வழங்கும் வாய்ப்பை வழங்கி இத்தொழிலை விரிவுபடுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com