குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ் கைது: சிபிஐ அதிரடி!
குட்கா ஊழல் வழக்கில், கிடங்கு உரிமையாளர் மாதவராவை சிபிஐ இன்று கைது செய்துள்ளது. இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள் ளனர்.
2013-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி தமிழகத்தில் குட்கா பொருட்களை உற்பத்தி மற்றும் விற்பனை செய்ய தடை விதித்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. ஆனாலும் தடையை மீறி தமிழகத்தில் குட்கா தயாரிப்பு மற்றும் விற்பனை தொடர்வதாக புகார்கள் எழுந்தன. 2016-ஆம் ஆண்டு ஜூலை 7 மற்றும் 8-ஆம் தேதிகளில், சென்னை செங்குன்றத்தில் உள்ள எம்.டி.எம். குட்கா நிறுவனத்துக்கு சொந்தமான கிடங்கில், வருமானவரித்துறை சோதனை நடத்தியது. அப்போது அந்நிறுவனம் 250 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தது தெரியவந்தது. அதோடு மாதவ ராவ் வீட்டில் கைப்பற்ற டைரியில், குட்கா விற்பனைக்காக யார், யாருக்கு எவ்வளவு லஞ்சம் தரப்பட்டது, என்ற விவரம் இருந்தது. அந்த டைரியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், சென்னை பெருநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்ததாக தகவல் வெளியானது.
இதுதொடர்பான வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், சுமார் 35 இடங்களில் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக சென்னை நொளம்பூரிலுள்ள முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் வீட்டில் அதிகாரிகள் ரெய்டில் ஈடுபட்டனர். இதேபோன்று கிரீன்வேஸ் சாலையிலுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதற்குமுன், கடந்த 2017ஆம் ஆண்டு விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை எடுத்துச்சென்றனர். தற்போது குட்கா முறைகேடு விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா வீட்டிலும் சோதனை நடத்திய அதிகாரிகள், லஞ்ச புகார் பற்றியும் விசாரித்ததாக கூறப்படுகிறது. சென்னை முகப்பேரில் உள்ள டிஜிபி ராஜேந்திரன் வீட்டிலும் இச்சோதனை நடைபெற்றது.
சென்னை தியாகராய நகரில் உள்ள ரயில்வே டிஎஸ்பி மன்னர் மன்னன் வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதேபோன்று மேலும் சில முக்கிய அதிகாரிகளின் வீடுகளில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து ஜார்ஜ் வீட்டில் இன்று 2வது நாளாக சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தப்பட்டது. பின்னர் சோதனை நிறைவு பெற்றது.
இந்நிலையில் குட்கா விவகாரத்தில் இடைத்தரர்களாக செயல்பட்டதாக ராஜேஸ், நந்தகுமார் ஆகிய இருவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பின்னர் கிடங்கு உரிமையாளர் மாதவ ராவையும் கைது செய்தனர். இந்த வழக்குத் தொடர்பாக உணவு பாதுகாப்பு அதிகாரி செந்தில்முருகன், கலால் வரித்துறை அதிகாரி பாண்டியன். கிடங்கு உரிமையாளர்கள் மாதவராஜ், உமாசங்கர் குப்தா ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் வைத்து தீவிர விசாரணை நடந்துவருகிறது.