குட்கா ஊழல் விசாரணை: லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையராக ஜெயக்கொடி ஐஏஎஸ் நியமனம்
தமிழகத்தை குட்கா ஊழல் ஆட்டிப் படைத்து வரும் நிலையில், இதை விசாரிப்பதற்காக மாநில லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையர் பதவிக்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஜெயக்கொடி நியமிக்கப்பட்டுள்ளார்.
தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருட்களை விற்பனை செய்வதற்காக அமைச்சர்கள், காவல்துறை உயரதிகாரிகள் ஆகியோருக்கு குட்கா உற்பத்தியாளர் லஞ்சம் கொடுத்தது வருமானவரித் துறை விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து குட்கா ஊழல் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு அதிகாரியை நியமிக்கும்படி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டிருந்தது. மேலும் சிறப்பு அதிகாரியின் விசாரணையில் எவ்வித அரசியல் தலையீடும் இருக்கக் கூடாது என்றும் அவரது மேற்பார்வையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தது.
அதன் அடிப்படையில் மூத்த ஐஏஎஸ் அதிகாரியான வி.கே.ஜெயக்கொடி தமிழகத்தின் லஞ்ச ஒழிப்பு ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நிர்வாக சீர்த்திருத்த ஆணையர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என தமிழக அரசு வெளியிட்ட உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக லஞ்ச ஒழிப்பு ஆணையர் பொறுப்பை உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி கூடுதலாக கவனித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.