ரிஷப ராசி TO மிதுன ராசி | ஆலங்குடியில் நடைபெற்ற குருபெயர்ச்சி விழா -ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
செய்தியாளர்: C.விஜயகுமார்
குருவைப் போல் கொடுப்பவர்கள் இல்லை என்பதால் ஞான செல்வமான கல்வியில் இருந்து பொருட் செல்வமான பொன் வரை அனைத்தையும் வழங்குபவர் குருபகவான் என்பது நம்பிக்கை.. குரு பார்க்க கோடி செல்வம் என்று சொல்வார்கள். அவ்வாறு சிறப்புமிக்க கோயிலாக திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஆலங்குடியில் உலக பிரசித்தி பெற்ற ஆபத்து சகாயஸ்வரர் கோயில் உள்ளது சிறப்புமிக்க இந்த ஆலயத்தில் குரு பகவான் சுவாமிக்கு என்று தனி சன்னதி உள்ளது. நவகிரகங்களில் உள்ள குரு பகவான் பரிகாரத்தலமாகவும் விளங்கி வருகிறது.
இந்த கோயிலில் ஆண்டுதோறும் குரு பெயர்ச்சி விழா வெகு விமர்ச்சையாக நடைபெறுவது வழக்கம். இதில், ஆலங்குடி மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குருபகவானை தரிசிக்க வருவார்கள். இந்நிலையில், இந்த வருட குரு பெயர்ச்சி விழா நடைபெற்று வருகிறது. குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு குரு பகவான் சாமிக்கு 1008 லிட்டர் பால், மஞ்சள், இளநீர் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வந்த நிலையில், சரியாக குரு பகவான் 1.19 மணி அளவில் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு இடம் பெயர்ந்தார்.
அப்போது மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது மேலும் பரிகார ராசிகளான மேஷம், மிதுனம், கடகம், கன்னி, விருச்சகம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வரும் 15ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை லட்சார்ச்சனை நடைபெற உள்ளது. குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு கோயில் நிர்வாகம் சார்பில் நீண்ட பந்தல்கள் அமைக்கப்பட்டு, குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் குரு பகவானை தரிசிக்க இரு புறங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரெட் மேற்பார்வையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.