கூடுதல் கட்டணத்தை எஸ்.சி, எஸ்.டி. மாணவர்களிடம் வழங்கிவிட்டோம்: குரு நானக் கல்லூரி விளக்கம்

கூடுதல் கட்டணத்தை எஸ்.சி, எஸ்.டி. மாணவர்களிடம் வழங்கிவிட்டோம்: குரு நானக் கல்லூரி விளக்கம்
கூடுதல் கட்டணத்தை எஸ்.சி, எஸ்.டி. மாணவர்களிடம் வழங்கிவிட்டோம்: குரு நானக் கல்லூரி விளக்கம்

தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தல்படி பழங்குடியின, பட்டியலின மாணவர்களிடம் வசூலித்த விண்ணப்பக் கட்டணத்தை திருப்பி செலுத்திவிட்டதாக சென்னை குரு நானக் கல்லூரி விளக்கமளித்துள்ளது. இந்த விளக்கத்தை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம், அதுதொடர்பான வழக்கை முடித்துவைத்துள்ளது.

தமிழ்நாடு அரசின் உத்தரவுகளுக்கு முரணாக சென்னை வேளச்சேரி குரு நானக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பங்கள் வழங்கும்போது, பட்டியலின பழங்குடியின மாணவர்களிடமும் இளநிலை படிப்புகளுக்கு 300 ரூபாயும், முதுநிலை படிப்புகளுக்கு 500 ரூபாயும் விண்ணப்பக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் எஸ்சி எஸ்டி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் அதன் செயலாளர் கே. கண்ணையன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் டி.காஞ்சனா, அரசு தரப்பில் அரசு பிளீடர் பி.முத்துக்குமார், குரு நானக் கல்லூரி தரப்பில் வழக்கறிஞர் கார்த்திக் சேஷாத்திரி ஆகியோர் ஆஜரானார்கள்.

அப்போது குரு நானக் கல்லூரி தரப்பில் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களிடம் வசூலித்த கட்டணம் திருப்பி கொடுக்கப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பில், ‘விண்ணப்பக் கட்டணம் எவ்வாறு வசூலிப்பது, கூடுதலாக வசூலித்த தொகையை திருப்பி செலுத்துவது ஆகியவை குறித்து கல்லூரி கல்வி இயக்குனர் மூலம் அனைத்து மண்டல இணை இயக்குனர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பபட்டு, அனைத்து மண்டலங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது’ என தெரிவிக்கப்பட்டது. மேலும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களிடம் வசூலித்த கட்டணத்தையும், பிற மாணவர்களிடம் கூடுதலாக வசூலித்த கட்டணத்தையும் கல்லூரிகள் திருப்பி செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இவ்விளக்கங்களை ஏற்றுக்கொண்டு, குரு நானக் கல்லூரிக்கு எதிரான வழக்கை நீதிபதிகள் முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com