பொதுமக்கள் கூடும் நிகழ்வுகள்.. நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்களைப் பார்க்கலாம்...
பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்களைப் பார்க்கலாம்...
பொதுக் கூட்டங்களுக்கு அனுமதி வழங்குதல், கூட்டம் நடத்தும் இடம், நேரம், வழித்தடம், மேடை உள்ளிட்டகட்டுமானங்களின் உறுதித்தன்மை முதலியவற்றை முறைப்படுத்த வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியே 500 பேருக்கு ஒரு கழிவறை, 500 மீட்டர் தொலைவில் 6 முதல் 8 கழிவறைகள் ஏற்பாடு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக ஆபத்து உள்ளதாக சந்தேகம் எழும் பகுதிகளில் 50 பேருக்கு ஒரு காவலர் என்ற வகையில் பணியில் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
100 பேருக்கு ஒருவர் என கட்சியினர், தன்னார்வலர்களை ஈடுபடுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அரசியல் கட்சியினர் ரோடு ஷோ நடத்தினால், நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே உரை நிகழ்த்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழியில் எங்கும் உரை நிகழ்த்தக் கூடாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறப்பு அழைப்பாளரின் வாகனத்தை மக்கள் பின்தொடர்ந்து செல்வதை தடுக்க, தன்னார்வலர்களை நியமித்து ஒழுங்குபடுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் நின்று கொண்டிருப்போருக்கும் அமர்ந்திருப்போருக்கும் தனித்தனியே தடுப்பு பகுதிகள் அமைத்திட வேண்டும்.
ஐந்தாயிரம் பேருக்கு மேல் கூடும் பொதுக்கூட்டங்கள், மதம் சார்ந்தவை என, எந்தவொரு நிகழ்ச்சிக்கும் இது பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த ஆபத்து என்றால் 200 பேருக்கு ஒரு காவலர். மிதமான ஆபத்து என்றால் நூறு பேருக்கு ஒரு காவலர், அதிக ஆபத்து என்றால் 50 பேருக்கு ஒரு காவலர் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கூட்ட எண்ணிக்கைக்கு ஏற்ப திருப்பித் தரக்கூடிய காப்புத் தொகை வசூலிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் பேர் பங்கேற்பதாக இருந்தால் 1 லட்சம் ரூபாய் டெபாசிட், 10ஆயிரம் முதல் 20 ஆயிரம் என்றால் 3லட்சம் ரூபாய் பெடாசிட், 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையிலான மக்கள் பங்கேற்பதாக இருந்தால் 8 லட்சம் ரூபாய் வரை டெபாசிட், 50 ஆயிரம் பேருக்கு மேல் 20 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும் என விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
வீதிமீறலுக்கு ஏற்பகாப்புத் தொகையை முழுமையாகவோ, பகுதியாகவோ பிடித்தம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
காயம் அல்லது பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டால் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க ஏதுவாக காப்புத்தொகையை அந்த வழக்கில் இணைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அங்கீகரிக்கப்பட்ட இடத்தில் நடத்தப்படும் நிகழ்ச்சிக்கு 10 நாட்கள் முன்பாகவும் 15 நாட்களுக்கு மிகாமலும் மனு கொடுக்க வேண்டும்.
அங்கீகரிக்கப்படாத மற்ற இடத்திற்கு 21 நாட்கள் முன்பாகவும் 30 நாட்களுக்கு மிகாமலும் மனு கொடுக்க வேண்டும்.
கூட்டம் நடத்துவதற்கு குறைந்தபட்சம் 5 நாட்களுக்கு முன்னர் அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனு நிராகரிக்கப்பட்டால் குறைபாடுகளை நீக்கி புதிய மனு கொடுக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி, நிகழ்ச்சிக்கு 2 மணி நேரத்துக்கு மேலாக காத்திருப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பொதுக் கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்களை 3 மணி நேரத்துக்குள் நடத்தி முடிக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தின் கொள்ளளவைவிட அதிகளவில் கூட்டம் கூடினால் நிகழ்ச்சி அமைப்பாளர்கள், தடுப்புகள் கயிறுகள் மூலம் தனியிடத்தில் அவர்களை ஒழுங்குபடுத்திட வேண்டும் என
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விதிமீறல்கள், புகார்கள் உள்ளிட்டவை குறித்து நிகழ்ச்சிக்கு பின் அறிக்கை தயார் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

