கழிவு நீர் தேங்கும் சாக்கடையாக மாறிய குடியாத்தம் அரசுப்பள்ளியின் அவலநிலை

கழிவு நீர் தேங்கும் சாக்கடையாக மாறிய குடியாத்தம் அரசுப்பள்ளியின் அவலநிலை
கழிவு நீர் தேங்கும் சாக்கடையாக மாறிய குடியாத்தம் அரசுப்பள்ளியின் அவலநிலை

குடியாத்தம் அடுத்த அக்ரஹாரம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, மிகவும் மோசமான நிலையில் உள்ளது. காண்போர் மூக்கை மூடிக்கொள்ளும் அளவுக்கு, கிராமத்தின் ஒட்டுமொத்த கழிவு நீரும் தேங்கும் சாக்கடையாக பள்ளி வளாகம் முழுவது கொசு, புழுக்கள் ஆகியவற்றால் நிரைந்துள்ளது. இதனால் நோய் தொற்று உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. அடுத்த வாரத்தில் (செப். 1-ம் தேதி) பள்ளிகள் திறக்க உள்ள நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக பள்ளியில் நீடிக்கும் இந்த அவலநிலையை இப்போதாவது போக்க அப்பகுதி மக்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கோரிக்கை வைக்கின்றனர்.

பள்ளியில் மிக முக்கியமாக, நுழைந்தவுடன் இருக்கும் கபடி மைதானம்தான் மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது. மைதானம் முழுக்கவிருக்கும் கழிவு நீர்தான் பள்ளியின் வரவேற்பாக அமைந்துள்ளது. இதனால் மைதானம் கழிவு நீர் குட்டையாகவே காட்சியளிக்கிறது. இனியும் அரசு இவ்விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லையெனில் மக்கள் அனைவரும் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்துள்ளனர். மேலும், ‘பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பமாட்டோம், பள்ளியையும் திறக்க விடமாட்டோம். அதிகாரிகள் இங்கு வசித்து, அவர்களது பிள்ளைகள் இங்கு விளையாடி இருந்தால் நடவடிக்கை எடுத்திருப்பார்கள்’ எனக்கூறி அப்பகுதி மக்கள் ஆதங்கம் தெரிவித்துவருகின்றனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியையடுத்த அக்ரஹாரம் கிராமத்தில் கௌண்டன்ய ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளது அக்ரஹாரம் அரசு மேல்நிலைப்பள்ளி. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை உள்ள இப்பள்ளியில் ஏரிப்பட்டரை, பூங்குளம், ரங்கசமுத்திரம், ஐங்காலப்பள்ளி, அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 450-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா முதல் அலையின் போது கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகள் மூடப்பட்ட போது இப்பள்ளியும் மூடப்பட்டது. இந்த வருடத்துடன், பள்ளி மூடப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இதன் இடைபட்ட காலத்தில், அக்ரஹாரம் கிராமத்தின் கழிவு நீரை கௌண்டன்ய ஆற்றில் கொண்டுபோய் விட, கட்டப்பட்ட கழிவு நீர் கால்வாயை ஒப்பந்ததாரர் முறையாக கட்டாததால் அக்கழிவு நீர் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு கிராமத்தின் மொத்த கழிவு நீரும் பள்ளியின் நுழைவாயில் வழியாக வந்து பள்ளி வளாகத்தில் வகுப்பறைகளுக்கு முன்பு தேங்க தொடங்கியுள்ளது.

இதனால் பள்ளியில் கல்வி கற்க மாணவ செல்வங்களை வரவேற்க வேண்டிய நுழைவாயியில், தற்போது நோய் பரவும் கழிவு நீருடன் கிடக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் ஆரம்ப கட்டம் முதல் தற்போது வரை பலமுறை பள்ளியின் தலைமை ஆசிரியர், உள்ளூர் பஞ்சாயத்து செயலாளர், குடியாத்தம் வட்டாரவளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோரிடம் புகார் தெரிவித்தும், மனுகொடுத்தும் அவர்கள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளனர். இதன் விளைவாக, இன்று பள்ளியின் மைதானம் கழிவு நீர் தேங்கி சாக்கடையாக மாறி, சுகாதாரம் அற்ற நிலையில் புழு, பூச்சி, கொசுக்களின் வசிப்பிடமாக நோயை உண்டாக்கும் அபாய நிலையில் உள்ளது.

தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளாக தேங்கிவரும் கழிவு நீரால் மைதானம் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டு வகுப்பறைகள் முன்பு சாக்கடை தேங்கி, கபடி மைதானம் கழிவு நீர் குட்டையாக மாறியுள்ளது. பள்ளிகள் தொடர்விடுமுறை காரணமாக அக்ரஹாரம் கிராம சிறுவர்கள், இளைஞர்கள் இப்பள்ளி மைதானத்தில் விளையாடி வந்த நிலையில் காலப்போக்கில் அதுவும் இல்லாமல் போயுள்ளது. மேலும் கழிவு நீர் அருகே சிறுவர்கள் விளையாடுவதால் கொசுவால் நோய் பரவும் நிலையில், ஆபத்தான நிலையில் உள்ள கழிவு நீர் குட்டையினால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுமோ என்ற அச்சம் பொற்றோர் மத்தியில் நிலவி வருகிறது.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பழனி என்பவர் கூறுகையில், “அக்ரஹாரம் பகுதி கழிவு நீரை கால்வாய் மூலம் ஆற்றில் கொண்டு போய் விடுவதாக முதலில் சொன்னார்கள். பின்னர் பள்ளிக்கு எதிரிலேயே உடைத்து பள்ளி வாளாகத்தில் விட்டு விட்டார்கள். இதை கேட்டதற்க்கு இது தற்காலிகமானது தான் விரைவில் சரி செய்து விடுவதாக சொன்னார்கள். ஆனால் அதை செய்யாததால் மழை பெய்து மொத்த நீரும் பள்ளி வளாகத்தில் தேங்கிவிட்டது. பள்ளி இல்லாததால் பிள்ளைகள் விளையாடி வந்த நிலையில் தற்போது அதுவும் இல்லாமல் போய்விட்டது” என்கிறார்

பூபாலன் என்பவர் கூறுகையில், “அக்ரஹாரத்தை சுற்றிய ஏரிப்பட்டரை, பூங்குளம், ரங்கசமுத்திரம், ஐங்காலப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 430-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கு பயின்று வருகின்றனர். முறையாக கட்டப்படாத கால்வாயினால் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் பள்ளி வாளாகத்தில் தேங்கி நிற்க்கிறது. இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர், ஊராட்சி செயலாளர் உள்ளிட்டோரிடம் பல முறை புகார் தெரிவித்தும் பதில் மட்டுமே சொன்னார்கள் பணி செய்யவில்லை. செப்டம்பர் 1-ல் பள்ளிகள் திறக்கப்படும் என கூறியுள்ள நிலையில், இந்நிலை தொடர்ந்தால் பிள்ளைகள் பாதிக்கப்படுவார்களோ என்ற அச்சம் உள்ளது” என கூறினார்.

பிரகாஷ் என்ற இளைஞர் கூறுகையில், “பள்ளி வாளாகத்தில் உள்ள கபடி மைதானம் முழுவதும் தண்ணீர் தேங்கி குட்டையாக மாறியுள்ளது. இங்கு குழந்தைகள் அதிகம் விளையாடுகிறார்கள். அவர்கள் விளையாடும்போதெல்லாம் பெரியவர்களாகிய எங்களுக்கு எப்போது என்ன நடக்குமோ என்ற அச்சம் உள்ளது. கொரோனா முதல் அலை, இரண்டாவது அலை வந்தது... இப்போது 3-வது அலையும் வருவதாக அரசு சொல்கிறது. வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என சொல்லும் அரசு, எங்கள் அரசு பள்ளி நிலைமை உணர வேண்டும்” என கூறினார்.

குபேந்திரன் என்ற இளைஞர் கூறுகையில், “பள்ளி வளாகம் முன்பெல்லாம் விளையாட பயனுள்ளதாக இருந்தது. ஆனால் இப்போது கழிவு நீர் தேக்கம்தான் இருக்கு. இதில் உற்பத்தியாகும் கொசுவால் பலபேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வரும் அதிகாரிகளும், வாய்வார்த்தையாக பதில் சொல்கிறிர்களே தவிர நிலையான தீர்வு எடுக்கவில்லை. பல முறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தோம். ஒருவேளை அந்த அதிகாரிகள் இந்த ஊர் இல்லாததோ என்னவோ... அல்லது அவர்களின் பிள்ளைகள் இங்கு விளையாடததாலும் என்னவோ... ஏதோவொரு காரணத்துக்காக இன்னமும் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்கள் போல. ஒருவேளை அவர்கள் இங்கு இருந்து, அவர்கள் பிள்ளைகள் இங்கு விளையாடி இருந்தால் நடவடிக்கை எடுத்திருப்பார்கள். செப்டம்பர் 1-ம் தேதி முதல் பள்ளி திறக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. அப்போதும் இதே நிலையில் வளாகம் இருந்தால் நாங்கள் யாரும் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம், பள்ளியையும் திறக்க விடமாட்டோம். நிலையான தீர்வு கிடைக்கும் வரை இதை செய்வோம்” என்றார்.

ச.குமரவேல்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com