சினிமா பாணியில் ஆயுதங்களுடன் சுற்றிய ரவுடி கும்பல்: வளைத்து பிடித்த போலீஸ்
வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் சினிமா காட்சிகளைப் போல் பயங்கர ஆயுதங்களுடன் சென்ற ரவுடி கும்பலை காவல்துறையினர் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அரக்கோணம், வேலூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு பகுதியில் பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய ரவுடி கும்பல் ஒன்று, அரக்கோணம் வழியாக காரில் சென்று கொண்டிருப்பதாக செங்கல்பட்டு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதனை உறுதி செய்துகொண்ட காவலர்கள், அரக்கோணம் போலீஸாரை தொடர்புகொண்டு குற்றவாளிகள் குறித்த விவரங்களை தெரிவித்தனர்.
இதையடுத்து அரக்கோணத்தின் பல்வேறு இடங்களில் வாகன தணிக்கையை போலீசார் தீவிரப்படுத்தினர். மோசூர் சந்திப்பு பகுதியில் சென்ற கார் ஒன்றை வழிமறித்த போலீஸார், அதிலிருந்த பட்டரைவாக்கம் சிவா உள்ளிட்ட நான்கு ரவுடிகளை அதிரடியாக சுற்றிவளைத்து கைது செய்தனர். தகவலறிந்து சென்ற செங்கல்பட்டு துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான காவலர்கள், கைதான ரவுடிகளை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அவர்களிடம் இருந்து கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மக்கள் நடமாட்டம் மிகுந்த மோசூர் சந்திப்பில் ரவுடிகள் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்ட சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.