வட, தென் மாவட்டங்களில் குறைந்தது நிலத்தடி நீர்
போதிய மழையில்லா காரணத்தால் தமிழகத்தின் வடக்கு மற்றும் தென் மாவட்டங்களில் நிலத்தடி நீர் குறைந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதம் பரவலாக மழை பெய்ததால் ஒரு சில மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருந்தாலும், வடக்கு மற்றும் தென் மாவட்டங்களின் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது. இந்த மாவட்டங்களின் நிலத்தடி நீர்மட்டம் சராசரி அளவுடன் ஒப்பிடப்பட்டு உயர்வும், குறைவும் கணக்கிடப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, பெரம்பலூர் மாவட்டத்தில் 100 அடியில் நிலத்தடி நீர் கிடைக்கிறது என்றால், அது 140 அடிக்கு கீழாக சென்றுவிட்டது என்பதை, நிலத்தடி நீர்மட்டம் 40 அடி குறைந்துவிட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கணக்கீட்டின் படி, காஞ்சிபுரத்தில் ஜூலை மாதம் 35 அடியில் கிடைத்த தண்ணீர், ஆகஸ்ட்டில் 18 அடியிலேயே கிடைக்கிறது. தேனியில் 47 அடியாக இருந்த நிலத்தடி நீர்மட்டம் தற்போது 41 அடியாக மேம்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் 44 அடியாக இருந்த நிலத்தடி நீர்மட்டம் தற்போது 40 அடியாக உயர்ந்துள்ளது. அதேசமயம் தென்மாவட்டங்களில் போதிய மழை இல்லாததால், நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து கொண்டே செல்கிறது. நாகையில் ஜூலையில் 15 அடியில் கிடைத்த தண்ணீர் தற்போது 21 அடியிலும், கன்னியாகுமரியில் 25 அடியில் கிடைத்த தண்ணீர், தற்போது 29 அடிக்கு கீழாகவும் இறங்கியுள்ளது. திருச்சியில் 43 அடியாக இருந்த நிலத்தடி நீர் 45 அடியாக குறைந்துள்ளது.