பசியாற்றும் கருணை தேவதை... ஒரு ரூபாய்க்கு இட்லி விற்கும் 85 வயது பாட்டி..!

பசியாற்றும் கருணை தேவதை... ஒரு ரூபாய்க்கு இட்லி விற்கும் 85 வயது பாட்டி..!
பசியாற்றும் கருணை தேவதை... ஒரு ரூபாய்க்கு இட்லி விற்கும் 85 வயது பாட்டி..!

கோவை அருகே தள்ளாத வயதிலும், ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று வருகிறார் கமலா பாட்டி. பசியாற்றும் இந்த கருணை தேவதை யார்? என்று தெரிந்து கொள்வோம்.

கோவை ஆலாந்துரை அடுத்த வடிவேலாம்பாளைய சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு ரூபாய் இட்லி பாட்டி என்றால் அவ்வளவு பிரபலம். 85 வயதாகும் கமலாத்தாள், இந்த தள்ளாத வயதிலும் அடுப்பு புகையின் நடுவே, 'ஆவி' பறக்க சுழன்று வருகிறார். கணவரை இழந்த நிலையில் தனியாகவே இட்லி கடை நடத்திவரும் கமலா பாட்டி, முப்பது ஆண்டுகளுக்கு முன் 25 பைசாவுக்கு ஒரு இட்லி என்று விற்பனையை தொடங்கினார். விலைவாசி உயர்வால் பத்து ஆண்டுகளுக்கு முன்தான் இட்லி விலையை ஒரு ரூபாயாக உயர்த்தியுள்ளார் இந்த பாட்டி.

இட்லி மாவை கிரைண்டரில்‌ அரைப்பது, கல் உரலில் சட்னி வகைகளை அரைப்பது என பம்ரபரமாக சுழன்று வருகிறார் கமலா பாட்டி. சொந்த பக்குவத்தால் தயாரித்த மசாலாவைக் கொண்டு கமலா பாட்டி சமைக்கும் மணக்கும் சாம்பாருக்கு அடிமையான வாடிக்கையாளர்கள் ஏராளம். தங்களுக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே பாட்டி கடையில், இட்லி சாப்பிடுவதாகவும் சில நேரங்களில், எவ்வளவு சாப்பிட்டோம் என்றே தெரியாது என்றும் கூறுகிறார்கள் வாடிக்கையாளர்கள்.

லாபத்தை இலக்காக கொள்ளாமல், தன்னை நம்பி வரக்கூடிய பள்ளிக் குழந்தைகள், கூலி தொழிலாளர்கள் ஏமாறக்கூடாது என்பதாலேயே, இந்த வயதிலும் உழைப்பதாக கூறும் கமலா பாட்டி, அவர்களின் பசியாற்ற தனது உயிர் உள்ளவரை உழைத்தால் போதும்‌ என்கிறார் புன்னகையோடு.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com