“ஆண் குழந்தை பெற்றால்தான் சொத்து” - பெண் சிசு கொலைக்கு தூண்டிய தாத்தாவும் கைது

“ஆண் குழந்தை பெற்றால்தான் சொத்து” - பெண் சிசு கொலைக்கு தூண்டிய தாத்தாவும் கைது

“ஆண் குழந்தை பெற்றால்தான் சொத்து” - பெண் சிசு கொலைக்கு தூண்டிய தாத்தாவும் கைது
Published on

விழுப்புரம் பெண் சிசுக் கொலை விவகாரத்தில், ஆண் குழந்தை பெற்றல்தான் சொத்தில் பங்கு கொடுக்கப்படும் என்று கூறி தன்னுடைய பேத்தியை கொல்ல தூண்டியதாக தாத்தாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் பிறந்து 17 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை ஆற்று மணலில் உயிருடன் புதைக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெண்கள் பல்வேறு துறைகளில் பல சாதனைகளை நாள்தோறும் நிகழ்த்தி வரும் நிலையில், பெண் சிசு கொலைகள் தொடர்வது வேதனையான ஒன்றாக உள்ளது.

திருக்கோவிலூர் அருகே சுந்தரேசபுரம் கிராமத்தைச் சேர்ந்த வரதராஜன் - சவுந்தர்யா தம்பதிக்கு பிறந்த குழந்தைதான் கொல்லப்பட்டுள்ளது. இவர்களுக்கு திருமணமாகி 15 மாதங்களே ஆகின்றன. இரண்டு வாரங்களுக்கு முன் இவ‌ர்களுக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. பிறந்தது பெண் குழந்தை என்று அறிந்த உடனேயே மருத்துவமனையில் இருந்து வரதராஜன் சென்று விட்டார். 

பின்னர் உறவினர்களே சவுந்தர்யாவை டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்து வந்தனர். வீட்டிற்கு வந்‌த பிறகு 3 ஆவது நாள் வரதராஜன் குழந்தையை எடுத்துச்சென்று தென்பெண்ணை ஆற்றில் புதைக்கச்சென்றதாகக் கூறப்படுகிறது. அருகில் இருந்தவர்கள் பார்த்து குழந்தையை மீட்டு வீட்டுக்கு கொண்டுவந்தனர். வரதராஜனின் நடவடிக்கையால் பயந்துபோன சவுந்தர்யா, குழந்தையுடன் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். 

இதனையடுத்து, சமாதானமாக பேசி குழந்தையுடன் சவுந்தர்யாவை வீட்டுக்கு அழைத்து வந்த வரதராஜன், திங்களன்று மாலை, குழந்தையை யாருக்கும் தெரியாமல் எடுத்துச் சென்று, தென்பெண்ணை ஆற்றில் புதைத்துவிட்டார். குழந்தை வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்த சவுந்தர்யா உறவினர்களிடம் கூறினார். 

வரதராஜன் மீது சந்தேகம் அடைந்த அவர்கள், தென்பெண்ணை ஆற்றில் சென்று  சந்தேகத்தின்பேரில் தோண்டியபோது, குழந்தையை துணியில் சுற்றி புதைத்து வைத்தது தெரியவந்தது. இதனை அடுத்து வரதராஜனை விசாரணை செய்ததில் குழந்தையை புதைத்ததை அவர் ஒப்புக்கொண்டார். பெண் குழந்தை என்ற காரணத்தால் பெற்ற குழந்தையை, தகப்பனே ஆற்றில் புதைத்து கொன்றது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தகவல் அறிந்து வந்த திருக்கோவிலூர் காவல்துறையினர் வரதராஜனை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. வரதராஜனின் தந்தை துரைக்கண்ணு. இவர்களுக்கு 4 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. ஆண் குழந்தை பிறக்கும் வரை நிலத்தை கொடுக்க முடியாது என வரதராஜனை தந்தை துரைக்கண்ணு எச்சரித்துள்ளார். தன்னுடைய மனைவிக்கு பெண் குழந்தை பிறந்ததை அடுத்து எங்கு தன்னுடைய தந்தை சொத்தில் உரிமை கொடுக்க மாட்டார் என வரதராஜன் அச்சமடைந்துள்ளார். அதனையடுத்தே, தான் பெற்ற குழந்தையையே ஈவு இரக்கமின்றி மண்ணில் புதைத்து கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார். 

இதனையடுத்து, வரதராஜனை தொடர்ந்து அவரது தந்தையும் கொல்லப்பட்ட குழந்தையின் தாத்தாவுமான துரைக்கண்ணுவும் விசாரணைக்கு பின் கைது செய்யப்பட்டனர். இருவர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரும் புதன்கிழமை வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com