சங்ககிரி| பள்ளிக்குச் சென்ற சிறுமி மாயம்.. காணாமல் போனதாக நாடகமாடிய தாத்தா கைது!
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே புள்ளாக்கவுண்டம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வினோபாஜி நகரைச் சேர்ந்தவர் ராஜா, மீனா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் கடந்த மாதம் 30ஆம் தேதி அங்கன்வாடி மையத்திற்கு சென்ற சிறுமி கவிஷா மாலை வீட்டிற்கு தராததால் தந்தை ராஜா தேவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து குழந்தை கவிஷாவை தேடி வந்தனர்.
விசாரணையில் தாத்தா கைது..
இந்த நிலையில் கடந்த 4ம் தேதி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே மேட்டுக்கடை பகுதியில் மர்ம நபர் ஒருவர் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் சிறுமியை கொண்டு வந்து விட்டுச் சென்றுள்ளார். அதனையடுத்து போலீசார் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து தேவூர் போலீசார் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் யார் என தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் இன்று சங்ககிரி கள்ளுக்கடை பகுதியைச் சேர்ந்த குமார் மற்றும் சிறுமியின் தாத்தா லோகிதாஸ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் குமார், லோகிதாஸ் இருவரும் இணைந்து கடந்த 3 ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளனர். இதனால் நண்பரான குமாரிடம் லோகிதாஸ் தனது பேத்தியான கவிஷாவை மகன் ராஜா அடித்து துன்புறுத்துவதாக கூறி வீட்டிற்கு அழைத்துச்சென்றுள்ளார்.
அதனையடுத்து போலீசார் குழந்தையை தேடிவரும் சம்பவம் அறிந்து கடந்த 4-ம் தேதி காவல் நிலையத்தில் ஒப்படைக்க வந்த குமார், போலீசாருக்கு பயந்து கொண்டு நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே மேட்டுக்கடை பகுதியில் குழந்தையை இறக்கி விட்டுச் சென்று விட்டதாக தெரிவித்துள்ளார். பள்ளிக்குச் சென்ற சிறுமியை தாத்தாவே கடத்திச் சென்று விட்டு காணாமல் போனதாக நாடகமாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.