வரதட்சணைக் கொடுமையால் பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை வியாசார்பாடி பிவி காலனியை சேர்ந்தவர் சந்திரன். இவரது பட்டதாரி மகள் தேவிக்கும், மணலியை சேர்ந்த டார்வின் ராஜா என்பவருக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரியில் திருமணம் நடந்தது. 50 சவரன் தங்க நகை கொடுத்து பெண் வீட்டார் திருமணம் நடத்தி வைத்ததாக கூறப்படுகிறது. ஆனாலும், கூடுதலாக வரதட்சணை கேட்டு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் அடித்து துன்புறுத்தியதால் தேவி மிகுந்த மனவேதனையடைந்துள்ளார். இதை தாங்கிக்கொள்ள முடியாத தேவி, உயிரை மாய்த்துக்கொள்ளும் முடிவை எடுத்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதற்கான காரணத்தை செல்ஃபி வீடியோவாக எடுத்து தமது குடும்பத்தினருக்கு அனுப்பியுள்ளார். தற்கொலைக்கான காரணம் முழுவதையும் ஒரு கடிதத்தில் எழுதி அதனை மறைத்து வைத்துள்ளார். வீட்டில் மறைத்து வைக்கப்பட்டுள்ள இடத்தை தனது உடலில் பேனாவால் எழுதியுள்ள அவர், தாம் எப்படியெல்லாம் கொடுமை படுத்தப்பட்டிருப்பது குறித்தும், இதற்கு காரணமாக அவரது கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக வீடியோவில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் மணலி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.