தற்கொலைக்கு முயன்ற ஆசிரியர் காப்பாற்றிய மாணவர்கள் !
பல்லாவரம் அருகே தற்கொலை செய்துகொள்ள முயன்ற அரசுப் பள்ளி ஆசிரியரை மாணவர்கள் தடுத்து காப்பாற்றியுள்ளனர்.
சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் அரசுப் பள்ளியில் பணிபுரியும் விலங்கியல் ஆசிரியர் கிருபானந்தம் (40). நேற்று மதியம் பள்ளிக்கு வந்த இவர், தன்னிடம் ரூ.5 லட்சம் கடன் பெற்ற ஒருவர் அதனை திருப்பித் தராமல் ஏமாற்றுவதாக கூறியுள்ளார். அத்துடன் கடனை திருப்பி கேட்கச் சென்றிருந்த போது, தன்னை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், அடித்ததாகவும் அழுதுள்ளார். பின்னர் மாணவர்கள் கண் முன்னே பள்ளியின் இரண்டாவது மாடிக்கு ஓடிச்சென்று தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார். அவரை பின் தொடர்ந்து ஓடிய மாணவர்கள் தற்கொலை முயற்சியை தடுத்து காப்பாற்றியுள்ளனர். அவர்களுடன் சக ஆசிரியர்களும் சென்றுள்ளனர்.
அப்போது கிருபானந்தம் மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அவரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர் மேற்கொண்ட விசாரணையில் கிருபானந்தமிடம் பி.டி.ஏ தலைவர் முரளிதரன் ரூ.5 லட்ச ரூபாய் கடன் வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து சங்கர் நகர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதற்கிடையே தங்கள் ஆசிரியரை தாக்கியவரும், அவர் தற்கொலைக்கு முயல காரணமானவருமான நபரை கைது செய்ய வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய காவல்துறையினர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.
இதுதொடர்பாக புதிய தலைமுறையிடம் விளக்கமளித்துள்ள முரளிதரன், தான் வாங்கிய 5 லட்சம் ரூபாய் பணத்திற்கு இது நாள் வரை வட்டி கட்டி வருவதாகவும், தான் பணம் தரமாட்டேன் என ஒருபோதும் சொன்னதில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் தன் மீது அவதூறு பரப்பி அவபெயர் ஏற்படுத்தவே கிருபானந்தம் இதுபோல் செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.