தமிழாசிரியர் இல்லாததால் தமிழ் பாடப்பிரிவில் 84 பேர் தோல்வி
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழாசிரியர் இல்லாததால், இந்த ஆண்டு மேல்நிலை வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களில், 84 பேர், தமிழ் பாடத்தில் தோல்வியை தழுவியுள்ளனர்.
ஸ்ரீபெரும்புதுாரில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஸ்ரீபெரும்புதுார், வடமங்கலம், போந்துார், கொளத்துார் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் இருந்து, ஏராளமான மாணவர்கள் அங்கு பயில்கின்றனர். இந்த பள்ளியில் ஓராண்டாக மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தமிழாசிரியர் இல்லை. இதனால், நடந்து முடிந்த கல்வியாண்டில், தமிழாசிரியர் இல்லாமல், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள், 255 பேர், தங்களாகவே படித்து, பொதுத்தேர்வு எழுதினர்.
இந்நிலையில்,இதில் பிளஸ் 1 வகுப்பில், 53 மாணவர்களும், பிளஸ் 2 வகுப்பில், 31 மாணவர்களும், தமிழ் பாடத்தில் குறைந்த மதிப்பெண்கள் பெற்று தோல்வியை தழுவியுள்ளனர். இப்பள்ளியில் தமிழ் பாடப்பிரிவிற்கு என, ஆசிரியர்கள் நியமிக்கப்படாமல், மற்ற பாடப்பிரிவு ஆசிரியர்களை கொண்டு பயிற்சி அளிக்கப் படுகிறது. அவர்கள் போதிய ஆர்வம் இன்றியும், நமக்கெதற்கு என்ற நிலையிலும் செயல்படுகின்றனர்.
இதனால், தற்போது கல்வி பயிலும் மாணவர்களின், தமிழ் பாடத்தின் கல்வி எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இந்த ஆண்டு பள்ளி துவங்க உள்ள நிலையில், மாணவர்கள் தாங்களாகவே தமிழ் பாடத்தை பயின்று வருகின்றனர்.
இந்த நிலை நீடித்தால், தாய் மொழியான தமிழில் மாணவர்கள் பின் தங்கிய நிலையை அடைவர். எனவே மாணவர்களின் நலன்கருதி, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட இங்கு, தமிழ் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என, மாணவர்களும், பெற்றோரும் எதிர்பார்க்கின்றனர்.